சனி, 9 ஏப்ரல், 2016

பூத்துக் குலுங்கும் உதகை ரோஜா பூங்கா, ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்


ooty_roseஉதகை ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆனால் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு ரோஜா கண்காட்சி ரத்து செய்யபட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்கா 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, ஊதா, பச்சை, வெளிர்மஞ்சள் உள்பட பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான ரோஜாக்களை இங்கு மட்டுமே காண முடியும் என்பதனால் ஆண்டிற்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், ரோஜா இங்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனின் போது, ரோஜா கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சீசன், உதகையில் தொடங்கி உள்ளதால் ரோஜா பூங்காவை காண அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். பல வண்ண ரோஜா மலர்களுடன், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படங்களை  எடுத்துச் செல்கின்றனர். இந்தநிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக உதகை ரோஜா பூங்காவில் நடைபெற கண்காட்சி ரத்து செய்யபட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர். 

இதே போன்று சுற்றுலா தொழிலை நம்பி உள்ள உள்ளுர் மக்களும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே தேர்தல் ஆணையம் ரோஜா கண்காட்சியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதகை நகர மக்களும், சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.