2020க்குப் பிறகு கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும், மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகதான் மூளும், போன்ற அச்சமூட்டும் தகவல்களுக்கு நடுவே, கோடை வந்தால் மட்டுமே தண்ணீரைப் பற்றியும் அதன் சேமிப்பு முக்கியத்துவம் பற்றியும் அநேக பேர் பிரசாரம் செய்கிறோம்.
வறட்சி காலத்தில் ஐபிஎல் போட்டிகள் தேவையா என ஒருபுறம் கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், எத்தனை பேர் தண்ணீர் சிக்கனத்தை நம் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் பின்பற்றுகிறோம்? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் முயற்சியாகவே தென்தமிழகத்தின் முதல் மழை இல்லம், சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்,மதுரை மழை இல்லம் நிறுவனர் சக்திவேல்.
மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, தண்ணீர் சிக்கனம், நீர் மேலாண்மை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘ரெயின் ஸ்டாக்’ அமைப்பினர், இந்த மழை இல்லத்தை ‘உலக தண்ணீர் தினம்’ அன்று தொடங்கியுள்ளனர்.
மழை நீரை எவ்வாறெல்லாம் சேகரிக்கலாம் என்பதற்கான ஓர் மாதிரி இல்லம் இது எனக் கூறும் அதன் நிறுவனர் சக்திவேல், தண்ணீருக்காக ஆழ்குழாய் அமைக்கும்போது, பாறைகளை கடந்து 10 அடி முதல் 100 ஆடி ஆழத்திற்கும் மேல்தான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், நமது பாரம்பர்ய முறையான கிணறு தோண்டியபோது, நிலத்திற்கும் பாறைகளுக்கும் நடுவிலேயே 15 அடியில் தண்ணீர் கிடைத்துவிட்டது.
நாங்கள் அமைத்துள்ள இந்த மழை இல்லத்தில், மழைநீர் தேங்கும் இடங்களிலெல்லாம் சேமிக்கும் விதமாக பில்டர்கள் கொண்ட தொட்டிகள் அமைத்துள்ளோம். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஒரு தொட்டியில் சேமித்து அதில் கல்வாழை போன்ற செடிகளை நடுகிறோம். இதன்மூலம் கழிவுநீரிலுள்ள நச்சுத்தன்மை நீங்கி சுத்திகரிக்கப்படுகிறது. இதை வீட்டுத்தோட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். நம் வீட்டுக்குத் தேவையான காய்கறி, கீரைகளை இயற்கை முறையில் நமக்கு நாமே உற்பத்தி செய்யும் வகையில் மாடித் தோட்டம் அமைத்திருக்கிறோம். மதுரையில் மட்டும் சராசரியாக வருடத்திற்கு 85 செ.மீ. மழை பெய்கிறது. இதை முறையாக சேமித்தால் ஆண்டிற்கு 2,700 கன அடி நீரை ஒவ்வொரு வீட்டிலும் சேமிக்கலாம். இந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே இந்த இல்லம். இங்கு பார்வையிட வரும் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் மழை, நிலம், நீர், நீர்மேலாண்மை குறித்த நேரடி விளக்கக் கண்காட்சியும் நடத்தப்படுகிறது" என்றார்.
மழை இல்லை, நிலத்தடி நீர் குறைந்துவிட்டது எனப் பேசிப்பயனில்லை. நீர்வளம் பெருக மழைவளம் பேண வேண்டும். இதற்காக ஒவ்வொரு தனிநபரும் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால், ஒருபோதும் தண்ணீருக்காகப் பிளாஸ்டிக் குடங்களைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் லாரி பின்னால் ஒடவேண்டிய சூழலும், தண்ணீருக்காக அண்டை மாநில சண்டைகளும் ஒருபோதும் ஏற்படாமல் தன்னிறைவுடன் வாழலாம்.