சனி, 18 ஜூன், 2016

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் - தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரம் - தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!
*******
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் குரல்கொடுத்து வருகின்றது. மேலும், இவர்களை விடுதலை செய்வது என தமிழக அரசும் சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு தமிழக அரசு மனு அனுப்பியது. ஆனால், ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை புறந்தள்ளியுள்ளது மத்திய அரசு.
மத்திய விசாரணை அமைப்பு நடத்திய வழக்கு என்பதால் அவர்களை விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற ரீதியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், விதி 435-இன் கீழ் இந்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தாலும், 2015 டிசம்பர் 2 அன்று, உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட ஆணையம் வழங்கியுள்ள தீர்ப்பானது, ஏழு தமிழர் விடுதலைக்கு மாற்று வழியை காட்டுகிறது.
அதன்படி அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ், தமிழக அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநர் வழியாக ஏழு தமிழர்களை விடுதலை செய்யலாம். உறுப்பு 161 மாநில அரசுக்கு வழங்கும் மன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்பு அதிகாரம் நீதிமன்றத் தலையீட்டுக்கு அப்பாற்பட்டது என அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஆகவே, தமிழக அரசுக்கு இருக்கிற ஓரே வழி அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 தான். எனினும், பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஜெயலலிதா வைத்த கோரிக்கைகளில் ஏழு தமிழர் விடுதலையும் ஒன்று என்பதால், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.