செவ்வாய், 6 டிசம்பர், 2016

தமிழக முதல்வராக ஜெயலலிதா அமல்படுத்திய முக்கிய திட்டங்கள்

Jayalalitha fb
ஆட்சிக் காலங்களில் மற்ற மாநிலங்களும். ஏன், வெளிநாடுகளும் கூட வியக்கும் வகையிலான புதுமையான திட்டங்களை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. 1991ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல்முறையாக தமிழக முதலமைச்சரானார் ஜெயலலிதா. தமிழகத்தின் 11வது முதலமைச்சரானபோது அவருக்கு வயது 43. அப்போது அவரது பெயர் சொல்ல வைத்த திட்டங்களில் முதன்மையானது, தொட்டில் குழந்தை திட்டம். பெண் குழந்தைகளை கள்ளிப் பால் கொடுத்து கொல்வது. குப்பைத் தொட்டியில் விட்டுச் செல்வது என நடந்த கொடுமையை அறிந்து, அரசே பெண் குழந்தையை பாதுகாத்து, பராமரித்து ஆளாக்கும் இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக, ஆண் காவலர்கள் பணியாற்றும் காவல் நிலையங்களில் பெண்கள் துணிவுடன் வந்து புகார் தர அஞ்சும் நிலையை மாற்றும் வகையில், அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்தவர் ஜெயலலிதா. ஆண் காவலர்களைப் போலவே இருந்த காவல் சீருடையை மாற்றி, பெண் காவலர்களின் கண்ணியத்துக்கேற்ப புதுவடிவம் தந்தார் ஜெயலலிதா.
2011ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அவரது பெயர் சொல்லும் மற்றொரு முக்கிய திட்டமாக அமைந்தது மழை நீர் சேகரிப்புத் திட்டம். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான வறட்சியை சமாளிக்க, மழை நீரை சேமிப்பதைக் கட்டாயமாக்கினார். இந்த திட்டத்தால் பூமிக்குள் செலுத்தப்படும் மழை நீர் அதிகரித்து, நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், குடிநீர் பஞ்சம் தவிர்க்கப்பட்டது. இந்த திட்டத்தை பல மாநிலங்களும் வரவேற்பு, தங்கள் மாநிலங்களில் இத்திட்டத்தை அமல்படுத்தின. வெளிநாடுகள் பலவும் பாராட்டின.
பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் மற்றும் சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை பல மடங்காக பெருக்கியது ஜெயலலிதாவின் மற்றொரு பாராட்டத்தக்க திட்டமானது. பேருந்து வசதியில்லாத அல்லது நீண்ட தூரம் கடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவ, மாணவிகளின் நலன் கருதி, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அமல்படுத்தினார். இதனால், மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்த திட்டத்தையும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்றளவும் செயல்படுத்தி வருவது ஜெயலலிதாவின் சாதனையாக பார்க்கப்படுகிறது.
திருமண வயதில் இருந்தும், வசதியின்மையால் மணமுடிக்க இயலாத ஏழை இளம்பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. முதலில் தாலிக்கு 4 கிராமாக இருந்த இலவச தங்கம், இப்போது ஒரு சவரனாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நிதி உதவியும் 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.
ஏழைகள் பயன்பெறும் வகையில் ரேஷனில் 3 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று விலைக் குறைப்பு செய்த ஜெயலலிதா, தனது அடுத்தடுத்த ஆட்சிக் காலத்தில் அதை முற்றிலும் இலவசமாக்கி, குடும்ப அட்டைக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்தை அமல்படுத்தினார். அதோடு, மானிய விலையில், சமையல் எண்ணெய், பருப்பு வகைகளையும் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். இதன்மூலம், சுமார் ஒன்றே முக்கால் கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
எம்.ஜி.ஆரால் அறிமுகமான சத்துணவு திட்டத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார் ஜெயலலிதா. மதிய உணவுடன் காலை உணவாக சத்து உருண்டை, பயறு வகைகள், பழங்கள் வழங்கச் செய்தார். மதிய உணவிலும் முட்டை, கலந்த சாத வகைகள் என பல மாற்றங்களைச் செய்தார். இதன்மூலம், மாணவர்கள் ஊட்டச்சத்து பெறுவதுடன், கற்றலில் இடை நிற்றலையும் தவிர்க்க முடியும் எனக் கருதினார் ஜெயலலிதா.
பள்ளி செல்ல இலவச சைக்கிள் வழங்கிய ஜெயலலிதா, மாணவர்களின் கணினி அறிவியல் அறிவை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில், அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி மற்றும் அதற்கான கைப்பைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார். கல்லூரி மாணவர்களுக்கு இந்தச் சலுகைகள் என்றால், ஒன்றாம் வகுப்பு முதல் பயிலும் தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணி, கணித உபகரணப் பெட்டி என கல்விக்கான அனைத்தையும் இலவசமாக்கினார்.
கோயில்களை குறைந்தபட்சம் ஒரு கால பூஜை நடைபெறுவதை உறுதி செய்த ஜெயலலிதா, பெரிய கோயில்களில் அன்னதான திட்டத்தையும் அமல்படுத்தினார். அடுத்தடுத்த ஆட்சிகளில் அன்னதானம் வழங்கும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளின் எண்ணிக்கையையும் அவர் அதிகரித்து வந்தார். அதற்கும் மேலாக, பசிப் பிணியை அறவே அகற்றும் நோக்கத்தில், ஏழைகளுக்கென மலிவு விலை உணவுகளை வழங்கும் அம்மா உணவகங்களை அறிமுகம் செய்தார்.
அதில் தொடங்கிய 'அம்மா'வின் பயணம் வேகமெடுத்தது. குறைந்த விலை மருந்துகளுக்கான அம்மா மருந்தகம், சுத்திகரிக்கப்பட்ட குறைந்த விலை குடிநீரை உறுதி செய்யும் அம்மா குடிநீர், ஏழைகளின் சொந்த வீடு கனவை நனவாக்க அம்மா சிமென்ட் மற்றும் இலவச கான்கிரீட் வீடுகள் ஆகியவை அடுத்தடுத்த அம்மா திட்டங்களாகும். அதே வரிசையில் இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார் ஜெயலலிதா. ஒன்றே முக்கால் கோடி ரேஷன் கார்டுகளுக்கு இந்தப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
ஏழை பெண்களுக்கு திருமண உதவி, தாலிக்குத் தங்கம் மட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பராமரிப்பு திட்டம், பிரசவ கால நிதியுதவி மற்றும் மகப்பேறு பெறும்போது தாய்க்கும், சேய்க்கும் சஞ்சீவி மருந்து உள்ளிட்ட 16 விதமான இலவசப் பொருட்கள் வழங்கும் திட்டமும், ஜெயலலிதாவால் உருவானதாகும்.
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் அவரது மக்கள் நலத் திட்டங்கள் புதிய உச்சத்துக்குச் சென்றதாகக் கூறலாம். இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டம், உழவர் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றுடன் இந்த முறை அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக பூரண மதுவிலக்குத் திட்டம், இலவச கைபேசி வழங்கும் திட்டம், 50 சதவிகித மானியத்தில், பணிக்குச் செல்லும் மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் என ஜெயலலிதாவின் மக்கள்நலத் திட்டங்கள் நீள்கின்றன.