வியாழன், 1 டிசம்பர், 2016

தங்க நகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: மத்திய அரசு விளக்கம்

தங்க நகைகள் வைத்திருப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வருமான வரித் திருத்த மசோதாவில் வீடுகளில் தங்க நகை வைத்திருப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
 
வீடுகளில் தங்க நகை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருமான வரிச் சட்டத்தின் 1916ஆவது விதியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள கட்டுப்பாடுகள் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தெரிய வரும்போது நடத்தப்படும் சோதனையின்போது அனுமதிக்கப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு என இடம்பெற்றுள்ளது.
ஆய்வின்போது, குடும்பத்தில் உள்ள திருமணமான பெண்களுக்கு தலா 500 கிராம் தங்க நகைகளுக்கு கணக்கு கேட்கப்படாது. திருமணமாகாத பெண்ணுக்கு 250 கிராமும், ஆணுக்கு 100 கிராமும் கணக்கு கேட்கப்படாது என்றும், அதற்கு மேல் உள்ள தங்கத்துக்கு கணக்கு காட்டாவிட்டால் 30 சதவிகித வரி செலுத்த நேரிடும் என்றும் வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இது திருத்த மசோதாவில் 60 சதவிகிதமாக அதிகரிக்கப்படுவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், குடும்பத்தின் பாரம்பரிய நகைகளை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.