பெங்களூரு(30 ஏப் 2017): கர்நாடக பா.ஜ.கவில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு 4 தலைவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாட்க மாநில பா.ஜ.கவில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் எடியூரப்பா மாற்றங்கள் செய்ததில் ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் திருப்தி அடையவில்லை. இதனால் ஏற்கனவே இருவருக்கும் இருந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. இதனால் பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் எடியூரப்பா, ஈசுவரப்பா ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறின.
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈசுவரப்பா ஈடுபடுவது பற்றி மேலிட தலைவர்களிடம் புகார் அளிக்க எடியூரப்பா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் அமித்ஷாவை எடியூரப்பாவால் நேற்று சந்திக்க முடியாமல் போனது. இதனால் மற்ற தலைவர்களை சந்தித்து எடியூரப்பா பேசினார். அதே நேரத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈசுவரப்பா ஈடுபட்டு வருவது, அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு எடியூரப்பா கொண்டு சென்றார்.
இதனை அடுத்து அமித்ஷா உத்தரவின் அடிப்படையில், மோதலை சரிசெய்ய மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் நேற்று இரவு பெங்களூருவுக்கு வந்தார். டெல்லி சென்ற மாநில தலைவர் எடியூரப்பாவும் பெங்களூருவுக்கு திரும்பினார். .
இதற்கிடையே எடியூரப்பா, ஈசுவரப்பா தரப்பிலும் தலா இரு தலைவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். கர்நாடக பா.ஜ.கவில் ஏற்பட்ட பிளவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.