நம் குடும்பத்தில் ஒருவர் என்பதைப் போன்ற தோற்றம். மிக ஆபத்தான நச்சு கருத்துக்களையும் தன் இனிமையான புன்னகைக்குள் ஒளித்து வைத்திருப்பார். அவர், பாஜகவின் மாநில பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான திருமதி. வானதி சீனிவாசன். மகாத்மா காந்தியை படுகொலை செய்த, குஜராத்தில் 2000 முஸ்லீம்களை அழித்தொழித்த, பாபர் மசூதியை இடித்து இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை ஏற்படுத்திய இந்துத்துவாவின் வார்ப்பு இவர்.
இவரைப் பற்றி இப்போது எழுத வேண்டிய அவசியமென்ன?
தொலைக்காட்சி விவாதங்களில் இவரை அடிக்கடி பார்க்கலாம். பாஜகவின் சார்பில் கலந்து கொள்வார். தனது கட்சிக்கு எதிரான எத்தகைய விமர்சனங்களுக்கும் சிரித்து சிரித்து பதில் சொல்லக்கூடியவர். இவரது பேச்சுக்களைப் பார்த்தால்…அட, பாஜக ரொம்ப நல்ல கட்சியாக இருக்கும்போல… என்று அரசியல் புரிதல் இல்லாத சாமாண்ய மக்கள் நினைத்துக்கொள்ளக்கூடிய அளவில் இருக்கும்.
மூன்று நாட்களுக்கு முன்பாக ஒளிபரப்பான, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொருளாதார அறிஞர் திரு. ஜெயரஞ்சன், மோடியின் ஆட்சியில் குஜராத் மாநிலம், பல்வேறு துறைகளில் எந்தளவுக்கு பின்தங்கி உள்ளது என்பதை ஆதாரங்களுடன் புள்ளிவிபரங்களுடன் புட்டுப்புட்டு வைத்தார். ஆரம்பத்தில், தன் வழக்கமான ட்ரேட் மார்க் புன்னகையோடு மறுத்துக் கொண்டே வந்தார் வானதி சீனிவாசன். ஆனால், திரு.ஜெயரஞ்சன் விடவில்லை. தொடர்ந்து புள்ளிவிபரங்களை அள்ளிப்போட்டு மோடியின் ஆட்சி எவ்வளவு மோசமானது என்பதை ஆணித்தரமாக வாதிட்டார். உள்ளே ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பூதம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா என்ன?
அம்மையார் வானதி தன் ஆர்.எஸ்.எஸ் முகத்தைக் காட்ட ஆரம்பித்தார். ஒரே கூச்சல். மரியாதைக்குரிய ஒரு மூத்த பேராசிரியர் என்றும் பாராமல் ஜெயரஞ்சனை பேசவே விடாமல் காச்மூச்சென்று கத்துகிறார். நிலைமையைப் புரிந்து கொண்டு…ஒருவழியாக இடைவேளை விட்டு சமாளித்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த திரு.குணசேகரன்.
இதற்கு முன்பாக இந்துத்துவஆட்கள் இந்தளவுக்கு குரலை உயர்த்தி தமிழகம் கண்டதில்லை. குளிர்விட்டுப்போச்சு. இந்தப் பெருமையெல்லாம்… பெரியார் மண்ணியில் இவர்களை வளர்த்துவிட்ட…ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் வைகோவுக்கும் ராமதாசுக்கும் விஜயகாந்துக்கும் தான் போய்ச் சேரும்.
மு.கந்தசுவாமி
source: kaalaimalar