சந்தையில் மாடுகளை விற்பனை செய்யவும், வாங்கவும் மத்திய அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்து கேரள மாநிலம் முழுவதும் நேற்று மாட்டிறைச்சி திருவிழா நடந்தது.
தடை
இறைச்சிக்காக காளைகள், பசுமாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசுமாடு, கன்று, ஒட்டகம் போன்றவற்றை ஒட்டுமொத்தமாக வாங்கவோ, விற்கவோ கூடாது என மத்தியர அரசு நேற்று முன்தினம் திடீரென தடை விதித்தது.
எதிர்ப்பு
இந்த உத்தரவுக்கு கேரள, மேற்கு வங்காளம், மிசோம், வட கிழக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த உத்தரவைக் கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று அறிக்கையும் வௌியிட்டு, பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதினார்.
மாட்டிறைச்சி திருவிழா
கேரள மாநிலத்தில் 90 சதவீத மக்கள் மாட்டிறைச்சி உண்பவர்கள், மத்திய அரசின் இந்த உத்தரவு அந்த மாநில மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால், தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், நேற்று பல்வேறு கட்சியினர் மாட்டிறைச்சி திருவிழா நடத்தினர்.
இலவசம்
இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் இளைஞர் அமைப்பினர் சாலைகளில் மாட்டிறைச்சி சமைத்து உண்டு, மக்களுக்கு இலவசமாக அளித்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி, மாட்டிறைச்சி சமைத்து போராட்டக்காரர்கள் உண்டனர்.
மோடிக்கு இறைச்சி ‘பார்சல்’
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்(டி.ஒய்.எப்.ஐ.) அமைப்பின் தேசியத் தலைவர் முகம்மது ரியாஸ் கூறுகையில், “ மத்தியஅரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், மாட்டிறைச்சி உண்போம். எங்கள் எதிர்ப்பை பிரதமர் மோடிக்கு தெரிவிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
கொல்லம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பினர், அரசு அலுவலகம் முன் மாட்டிறைச்சி சமைத்து உண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். “ மாட்டிறைச்சியை பொட்டலமாக கட்டி தபால்நிலையம் மூலம் மோடிக்கு அனுப்பிவைப்போம்’’ என்று மாவட்டகாங்கிரஸ் தலைவர் பிந்து கிருஷ்ணா தெரிவித்தார்.
கொச்சியில் நடந்த மாட்டிறைச்சி திருவிழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கலந்து கொண்டு, ரொட்டித் துண்டுகளையும், மாட்டிறைச்சியையும் ருசித்து உண்டார். மேலும் இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாட்டிறைச்சி திருவிழா நடந்தது.
சமையலறையில் இனவாதம்
இந்திய மாணவர் கூட்டமைப்பான எஸ்.எப்.ஐ. மாநிலத்தில் 210 இடங்களில் மாட்டிறைச்சி சமைத்து தாங்களும் உண்டு, மக்களுக்கும் இலவசமாக அளித்தனர்.
அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் எம். விஜின் கூறுகையில், “ குறிப்பிட்ட சிலர் சாப்பிடுவதை அரசு எப்படி நிர்ணயிக்க முடியும்?. மக்களுக்கு சத்தான உணவு கிடைக்கிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். மக்களின் வறுமையையும், ஏழ்மையையும் போக்க முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து, மக்களின் சமையல் அறைக்குள் இனவாதத்தை கொண்டுவரக்கூடாது’’ என்றார்.