புதன், 3 மே, 2017

இஸ்லாமிய இயக்கத் தலைவர்களை கடத்த திட்டமிட்ட கூலிப்படையினர் கைது: முக்கிய நபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

கோவையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி பாரூக் என்பவர் கடந்த மார்ச் 16-ம் தேதி இரவு உக்கடம் அருகே கொலை செய்யப்பட்டார். தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டிருந்த காரணத்தால், மத அடிப்படைவாத குழுக்களால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக கோவையைச் சேர்ந்த அன்சர்த், சதாம் உசேன், சம்சுதீன் ஆகிய 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், அப்துல் முனாப், ஜாபர், அக்ரம் ஜிந்தா ஆகிய மூவரை உக்கடம் போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து பாரூக் கொலைக்கு கண்டனம் தெரிவித்தன.
தலைவர்களை கடத்த திட்டம்
இந்நிலையில், பாரூக் கொலையை கண்டித்த இஸ்லாமிய இயக்கத் தலைவர்களைக் கடத்தும் நோக்கத்தில் இயங்கிய ஒரு கூலிப்படையை கோவையில் போலீஸார் நேற்று கைது செய்தனர். முக்கியத் தலைவர்களைக் கடத்தி, பணம் பறித்து, அதை பாரூக் கொலையில் கைதானவர்களுக்கு செலவிட திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.
உக்கடம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திருந்த 4 பேரை நேற்று போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் ஆள் கடத்தலுக்குத் தேவையான பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையில், கோவை போத்தனூரைச் சேர்ந்த ஜின்னா, கரும்புக்கடையைச் சேர்ந்த ஷபிகூர் ரகுமான், ஆசாத் நகரைச் சேர்ந்த நெளபல், மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு என்பதும், கோவையில் உள்ள முன்னணி முஸ்லிம் இயக்கத் தலைவர்களை கடத்தும் திட்டத்தில் வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார், மாநகரப் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில், கடத்தல் திட்டம் குறித்த மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 4 பேர் மீதும் கூட்டுச்சதி, கொலை செய்யும் நோக்கத்தோடு கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீஸார் வழக்குகளை பதிந்து கைது செய்தனர். இதனிடையே கூலிப்படையினர் கொடுத்த தகவலின் பேரில், இஸ்லாமிய இயக்கத் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாரூக் கொலையைக் கண்டித்து மார்ச் 20-ம் தேதி இஸ்லாமிய இயக்கங்கள் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தின. அப்போது ஒருங்கிணைத்து பேசிய, கோவை கோட்டைமேட்டைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரது பெயரே கடத்தல் பட்டியலில் இருந்ததையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சில சிலருக்கும் போலீஸார் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களோடு தொடர்பு இருக்கலாம் எனவும், பாரூக் கொலையில் தொடர்புடைய மத அடிப்படைவாதிகள் இவர்களை இயக்கியிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
கோவை மாநகர துணை ஆணையர் லட்சுமி கூறும்போது, ‘பாரூக் கொலை வழக்கில் கைதானவர்களுக்கு சட்ட உதவி வழங்கும் நோக்கில் இந்த கடத்தல் திட்டமிடப்பட்டுள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரிடம் விசாரணை நடக்கிறது. இஸ்லாமிய அமைப்பினரை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பு வழங்கியுள்ளோம்’ என்றார்.
போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட இஸ்லாமிய இயக்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘எங்களுக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் வரவில்லை. ஆனாலும் போலீஸார் அறிவுறுத்தல்படி நடக்கிறோம். கடத்தி பணம் பறிப்பதுதான் நோக்கம் என்றால், எங்களை விட வசதிபடைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். எனவே வேறு நோக்கத்துக்காக கடத்த திட்டமிருக்கலாம். என்னைப் போல பலருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
12 அமைப்புகள் கருத்து
கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் நேற்று கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
கோவை மாவட்ட சுன்னத்வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு, தமுமுக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமா அத் உள்ளிட்ட 12 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட னர். கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் இனாயத்துல்லாஹ், ராஜா ஹுசைன் ஆகியோர் கூறியதாவது:
கோவை உக்கடத்தில் கடந்த 16-ம் தேதி திவிகவைச் சேர்ந்த பாரூக் கொலை செய்யப்பட்டதை கூட்டமைப்பு வன்மையாக கண் டிக்கிறது. இஸ்லாமியர்களுக்கு இதில் தொடர்பு இருந்தால் அவர்களையும் கண்டிக்கிறோம். கொள்கை மாறியவர்களை வசை பாடவோ, தண்டிக்கவோ வேண்டு மென இஸ்லாம் மார்க்கம் கூறுவ தில்லை. சிலர் செய்யும் குற்றத்துக் காக ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் குற்றம்சாட்டுவது நியாய மல்ல. சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் கருத்தியல் மோத லால் கொலை நடந்திருப்பதாக செய்திகள் வருவதால், இதில் மர்மங் களும், சந்தேகங்களும் நிலவுகின் றன. இதில் தொடர்புடையதாகக் கூறப்படுபவர்கள் இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளைச் சாராதவர்கள். அவர்களை இயக்கியவர்கள் யார் என்பதை போலீஸார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்’ என்றனர்.
http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article9676252.ece

Related Posts: