ஞாயிறு, 14 மே, 2017

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த தமிழக அமைச்சர் - ஊர்வலத்துக்கும் அனுமதி!


நேற்று தமிழகத்தில் இரண்டு ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் ஊர்வலம் தடைவிதிக்கப்பட்ட நாமக்கல்லில் காவல்துறை பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது. தர்மபுரியில் தமிழக அமைச்சரே ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துள்ளனர். 
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒவ்வோர் ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அனுமதி கேட்கும்போதெல்லாம் தமிழக அரசில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அனுமதி வழங்கியதில்லை. இந்நிலையில் கடந்த டிசம்பரில் ஜெயலலிதா காலமான பின்னர், முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் சென்னையில் ஜனவரி 30-ம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளித்தார். இதற்குக் கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன.
  அ.தி.மு.க.விலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின்னர், சசிகலா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள், 'மோடி அரசின் பினாமியாக பன்னீர் செயல்பட முனைந்தார் என்றும் அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி அளித்தார். மோடியுடன் மிகவும் நட்பு பாராட்டிய ஜெயலலிதாவே அனுமதி அளிக்காத ஊர்வலத்துக்குப் பன்னீர் அனுமதி அளித்தது தவறு' என்று கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
 அதன் பின்னர், சசிகலா சிறைக்குப் போனார். துணைப் பொதுச்செயலாளராக தினகரன் பொறுப்புக்கு வந்தார். தற்போது அவரும் சிறையில் உள்ளநிலையில், முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அரசும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கொடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நாமக்கல்லில் போலீஸின் தடையை மீறி தடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரைக் கைது செய்தனர். இந்நிலையில், மே-13ம் தேதி அதே நாமக்கல்லில் காவல்துறை அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அதேபோல, தர்மபுரியில் 'ஆர்.எஸ்.எஸ்' சார்பில் நடைபெற்ற மகாசேவா நிகழ்ச்சியை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்துள்ளனர். இது, மத்திய அரசுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசும் இணக்கமாக போகத்தொடங்கியுள்ளதன் அறிகுறியாக கருதப்படுகிறது. 

source: http://www.vikatan.com/news/tamilnadu/89280-tn-minister-inaugurated-rss-function.html