திங்கள், 15 மே, 2017

சுற்றுச்சூழலை பாதுகாக்க பாரம்பரிய மரங்களை வளர்ப்போம்! May 15, 2017

சுற்றுச்சூழலை பாதுகாக்க பாரம்பரிய மரங்களை வளர்ப்போம்!


காற்றில் உள்ள கரியமில வாயுவை சுத்திகரித்து சுவாசிக்க உகந்த ஆக்சிஜனாக மாற்றுவது மட்டுமே மரங்களின் பணியாக கருதுவோமேயானால் மரங்கள் எனும் மாபெரும் ஜீவனை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என பொருள்.

கனிகளை வழங்குவதுடன், மரங்கள் சூழலியல் மண்டலத்தின் தூணாக திகழ்கின்றன. காற்றின் ஈரப்பதத்தை தக்க வைத்து மழைப் பொழிவை சாத்தியமாக்கக் கூடியவை மரங்களே. வளர்ச்சி முழக்கத்தின் பின்னணியின் உரு தெரியாமல் சிதைக்கப்பட்டு வருவது நாட்டின் வன வளமே. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் மர தினம் (Tree Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

மர தினத்தின் தீரமிக்க போராட்ட வரலாறு :

கடந்த ஆண்டு மே 15ஆம் நாள், இந்தியாவில் முதன்முதலாக  ஹைதராபாத் நகரத்தில் மர தினம் கொண்டாடப்பட்டது. தெலுங்கானா அரசு முன்மொழிந்த ஒரு சாலை முன்னேற்றத் திட்டத்திற்காக, கே.பி.ஆர் தேசியப் பூங்காவில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட திட்டமிடப்பட்டது. கே.பி.ஆர் தேசியப் பூங்காவில் இருந்த 600-க்கும் மேற்பட்ட மரங்கள், பல மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் புகலிடமாக இருந்து வந்தது. இதனால் இந்தப் பூங்காவில் இருந்த மரங்களை பாதுகாக்க, கட்சி சார்பற்ற, இயற்கை ஆர்வலர்களால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெற்ற போராட்டங்களும், பேரணிகளும் வெற்றிப் பெற்றதையடுத்து, மே 15ஆம் நாள் மர தினமாகக் கொண்டாடினர். 

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தல் :

மரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என வலியுறுத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலரான பேராசிரியர் புருஷோத்தம் ரெட்டி, மர தின கொண்டாட்டத்தை தோற்றுவித்ததன் மூலம் ஹைதராபாத் மக்கள் இந்திய மக்களுக்கு முன்னோடியாக அமைந்துவிட்டதாகவும், இந்த நாளை வருடா வருடம் தவறாமல் கொண்டாடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரம்பரிய மரங்களை காப்போம் :

இந்தியாவில் மரங்களை வெறும் மரங்களாக மட்டும் பார்ப்பதில்லை. மரம் ஒரு புனிதப் பொருளாகவும், இறைவனின் வரமாகவும் பார்க்கப்படுகிறது. மாமரம், ஆலமரம், அரசமரம், அத்தி மரம், வாழை மரம், கொடுக்காப்புலி மற்றும் வேப்ப மரம் ஆகியவை இந்தியாவின் முக்கியமான மற்றும் பாரம்பரியமான மரங்களாகும். 

பார்கத் அல்லது வடாவ்ரிக்‌ஷ் என அழைக்கப்படும் ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாகும். இது பல மருத்துவப் பலன்களை கொண்டுள்ளது. மற்றப்படி நாவல் பழங்கள், அத்திப்பழங்கள் மற்றும் வேப்ப இலைகள் அதிகமான பயன்களைப் பெற்றுள்ளது. 

தொழில் புரட்சியா? இயற்கை சீரழிப்பா? :

இத்தகைய மரங்களைப் பெற்றுள்ள நம் நாட்டில், தொழில்வளர்ச்சி எனவும், முன்னேற்றத்திட்டங்கள் என்ற பெயரிலும், நாள்தோறும் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. இழந்த மரங்களை திரும்ப நட வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், எல்லாரும் அதைச் செய்து விடுவதில்லை. 

வர்தா புயல் போன்ற இயற்கை பேரழிவு நேரங்களில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்வது தவிர்க்க இயலாத ஒன்றாகி போகிறது. வர்தா புயல் காரணமாக 47ஆயிரம் மரங்கள் வேருடன் சாய்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஏற்கனவே உள்ள மரங்களை பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏராளமான மரங்களை நடுவதும் அவசியமான ஒன்றாகும்.