வெள்ளி, 19 நவம்பர், 2021

மும்பை ஐகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்; மேலாடை அகற்றாமல் தொடுவதும் பாலியல் வன்முறைதான்!

 குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தடுக்கும் போக்சோ சட்டம் 2012ன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு ஒருவரின் தோலுடன் தோல் நேரடி உடல் தொடர்பு அவசியம் என்ற மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு, இதுபோன்ற வழக்குகளில் பாலியல் நோக்கம் முக்கியமானது என்றும், அதை சட்டத்தின் வரம்பிலிருந்து நீக்க முடியாது என்றும் கூறியது. இந்த சட்டத்தின் நோக்கம் குற்றவாளிகள் சட்டத்தின் கண்ணிகளில் இருந்து தப்பிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு, போக்சோ சட்டம் 7-வது பிரிவின் கீழ் ‘தொடுதல்’ அல்லது ‘உடல் தொடர்பு’ ஆகியவற்றை தோலுடன் தோல் என நேரடி உடல் தொடர்பு இருக்க வேண்டும் என்று வரையறை செய்வது அபத்தமான விளக்கங்களுக்கு வழிவகுக்கும். மேலும், அது இந்த சட்டத்தின் நோக்கத்தையே அழித்துவிடும். இந்த சட்டம் குழந்தைகளைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்டது. உதாரணமாக, மும்பை உயர் நீதிமன்றத்தின் விளக்கப்படி, குழந்தையைப் பிடிக்கும் போது கையுறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் ஒரு நபர் இந்த சட்டத்தின் கீழ் பொறுப்பேற்க வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தவறை சுட்டிக்காட்டியது.

“சட்டம் தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கும்போது, ​​நீதிமன்றங்கள் அந்த விதியில் தெளிவின்மையை உருவாக்க முடியாது என்று நாங்கள் கருதுகிறோம். தெளிவின்மையை உருவாக்குவதில் நீதிமன்றங்கள் அதீத ஆர்வம் காட்ட முடியாது என்பது சரியே” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்திய தலைமை வழக்கறிஞர், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

ஒருமனதாக அறிவித்த தீர்ப்பில், நீதிபதி ரவீந்திர பட், “குழந்தைகளின் கண்ணியத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் உணர்ச்சியற்ற முறையில் அற்பமான, சட்டப்பூர்வமாக்கப்பட்ட மற்றும் இயல்பாக்கப்பட்ட நடத்தை போன்ற ஒரு முடிவுக்கு வருவதில் மும்பை உயர் நீதிமன்றம் தவறு செய்ததாக” கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து ஒருவரை விடுவித்தது. போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தையின் மார்பகங்களை நேரடியாக ஒருவர் தோலுடன் தோல் நேரடி உடல் தொடர்பு இல்லாமல் அவரது ஆடைகளின் மேல் அழுத்துவது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று தெரிவித்தது.

இருப்பினும், தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் இந்த விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து, இது முன்னோடியில்லாத வழக்கு என்றும் இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற உத்தரவு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில், “இது மிகவும் குழப்பமான முடிவு” என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறினார். தலைமை வழக்கறிஞர் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் தனித்தனியாக மேல்முறையீடு செய்தனர்.

“நாளை, யாராவது ஒரு நபர், ஒரு ஜோடி அறுவை சிகிச்சை கையுறைகளை அணிந்துகொண்டு ஒரு பெண்ணின் முழு உடலையும் தொட்டால், இந்தத் தீர்ப்பின்படி அவர் பாலியல் வன்கொடுமைக்காக தண்டிக்கப்பட மாட்டார். இது ஒரு மூர்க்கத்தனமான உத்தரவு. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சல்வாரைக் கீழே இறக்க முயன்றனர், அதன்பிறகும் ஜாமீன் வழங்கப்பட்டது… நீதிபதி தொலைநோக்கில் விளைவுகளைப் பார்க்கவில்லை” என்று தலைமை வழக்கறிஞர் கூறினார். “மைனர் பெண்ணின் மார்பகத்தை சல்வாரைக் கழற்றாமல்கூட தொடுவது, சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு சமம்” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு டிசம்பர் 2016-ல் தொடங்கியது. 39 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் 12 வயது சிறுமியை சாப்பிட ஏதாவது கொடுப்பதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்த நபரின் வீட்டில் அந்த பெண்ணைக் கண்டுபிடித்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின்படி, அந்த நபர் சிறுமியின் மார்பகத்தை அழுத்தி சல்வாரை அகற்ற முயன்றார் என்று தெரிவித்தார்.

போக்சோ சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி, நேரடி உடல் தொடர்பு கொள்ளாமல் ஒரு மைனரின் மார்பகத்தைத் தடவுவதை பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியது. குழந்தையின் ஆடைகளை கழற்றாமல் அந்த ஆண், குழந்தையைப் பிடித்ததால், அந்தக் குற்றத்தை பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது என்றும் அதற்குப் பதிலாக, ஐபிசி பிரிவு 354-ன் கீழ் ஒரு பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் குற்றமாகும்.

நீதிபதி புஷ்பா வி கணேடிவாலா வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பில், குற்றவாளி சதீஷ் பாண்டு ராக்டேவுக்கு எதிராக, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு பொருந்தும் போக்சோ சட்டம் 8வது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்.

source https://tamil.indianexpress.com/india/superme-court-skin-to-skin-contact-pocso-act-bombay-high-court-371088/