வெள்ளி, 19 நவம்பர், 2021

தடுப்பூசியின் டோஸ் இடைவெளியை மிஸ் செய்தால் மீண்டும் முதல் டோஸா?…. 2 ஆம் டோஸ் ஏன் அவசியம்?

 17 11 2021 கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சண்டிகர் மாநில சுகாதார துறை, தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட 75 ஆயிரம் பேர், டோஸ்களுக்கான இடைவெளி முடிந்தும் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை கண்டறிந்துள்ளது.

சுமார் 16 வாரத்திற்கு முன்பு முதல் டோஸ் எடுத்துக்கொண்ட அவர்கள், இரண்டாம் டோஸ் எடுக்காமல் உள்ளனர். அதேபோல், கோவாக்சின் எடுத்துக்கொண்ட110 பேர், 6 வாரங்கள் முடிந்தும் இரண்டாம் டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த தரவு வெளியீடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொள்வதன் அவசியத்தை நமது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு சண்டிகர் பிஜிஐஎம்ஆர் பேராசிரியர் ராகேஷ் கோச்சர் விளக்கியுள்ளார். அதை இச்செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்:

சுமார் 70 ஆயிரம் பேர் கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ் எடுக்கவில்லை. அதனால் என்ன பாதிப்பு?

இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். அவர்கள் தங்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். பற்றாக்குறையான தேசிய வளங்களையும் வீணடிக்கின்றனர். இந்தியா முழுவதும், சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டாம் டோஸ் பெறவில்லை

டோஸ் இடைவெளி மிஸ் செய்திருந்தால் என்ன நெறிமுறைகள் பின்பற்றப்படும்? மீண்டும் முதல் டோஸ் எடுக்கனுமா?

அத்தகைய நெறிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. அதே சமயம், மிகப்பெரிய இடைவெளி என்றால், தடுப்பூசியின் முதல் டோஸிலிருந்து தான் தொடங்க வேண்டும். இரண்டாம் டோஸை, நாட்டில் எங்கு வேண்டுமானாலும் செலுத்திக்கொள்ளலாம். முதல் டோஸ் செலுத்திய இடத்தில் தான், இரண்டாஸ் டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை

தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியம்?

இரண்டு டோஸ் செலுத்துவது கட்டாயம் ஆகும். அமெரிக்காவின் ஜே&ஜே தடுப்பூசியைத் தவிர மற்ற அனைத்து அனைத்து கோவிட் தடுப்பூசிகளுக்கும் இரண்டு டோஸ்கள் தேவை. இரண்டாவது டோஸுக்குப் பிறகுதான், உண்மையான நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறது.

முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனா பரவலை கட்டுபடுத்தலாமா?

நிச்சயமாக, முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நோய் தொற்றின் தீவிரத்திலிருந்து தப்பிக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலைமை ஏற்படாது. தரவுகளை மதிப்பாய்வு செய்ததில், தடுப்பூசியில் நல்ல பலன் இருப்பதை காட்டுகிறது.

மூன்றாவது அலையைத் தடுக்க தடுப்பூசி உதவுமா?

கண்டிப்பாக உதவும். அதே சமயம், கொரோனாவின் மற்றொரு அலையைத் தடுக்க, கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பயணங்கள், நிகழ்ச்சிகள் செல்வதை தவிர்க்க வேண்டும். மாஸ்க் அணிவது கட்டாயமாகும்.

தடுப்பூசி பவர் எத்தனை காலத்திற்கு?

அதுகுறித்து தெளிவான அறிக்கை இல்லை. ஆனால், காலப்போக்கில் தடுப்பூசியின் திறன் குறைவதை கண்டறிந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தடுப்பூசியின் சக்தி ஆறு மாதத்தில் குறைவதால், அதன் பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் அவசியமா?

ஆம் கண்டிப்பாக. இந்த குழுவினருக்கு பூஸ்டரின் டோஸின் தேவை அவசியமாகும். இரண்டாம் டோஸ் முடிந்து, ஓராண்டில் பூஸ்டர் டோஸை நாம் எதிர்பார்க்கலாம் என தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/explained/why-the-second-dose-of-covid-19-vaccine-is-important-370479/