சனி, 24 ஜூன், 2017

அரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை ஏற்க கத்தார் மறுப்பு June 24, 2017

அரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை ஏற்க கத்தார் மறுப்பு


அல் ஜசீரா தொலைக்காட்சியை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட அரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை ஏற்க கத்தார் மறுத்துவிட்டது. 

அல் ஜசீரா தொலைக்காட்சியை மூடுதல், இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியுடனான உறவுகளைத் துண்டித்தல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ஏற்றால், உறவை மீண்டும் தொடர வாய்ப்பிருப்பதாக அரபு நாடுகள் அறிவித்துள்ளன. தீவிரவாதிகளுக்கு உதவுவதாக கத்தார் நாட்டின் மீது குற்றஞ்சுமத்திய சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் அந்நாட்டுனான உறவுகளைத் துண்டிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தன. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே சுமூகமான உறவுகளை மீண்டும் தொடங்கும் வகையில் குவைத் நாடு சமரச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், உறவுகளை மீண்டும் புதுப்பிக்கவேண்டுமானால், தீவிரவாதத்துக்கு ஆதரவளிப்பதை கத்தார் உடனே நிறுத்தவேண்டும் என அரபு நாடுகள் கோரியுள்ளன. அல் ஜசீரா தொலைக் காட்சியை மூடுவது, எகிப்து நாட்டின் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சியுடனான உறவுளைத் துண்டிப்பது உள்ளிட்ட 13 அம்சங்கள் அடங்கிய நிபந்தனைகளை அரபு நாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில், அரபு நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என கத்தார் அறிவித்துள்ளது.