அடுத்த மாதம் 17 ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் என்று தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.
பாஜகவுக்கு எதிர் அணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பொது வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு வருகின்றன. சென்னையில் நடந்த கருணாநிதியின் வைரவிழா, அதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விட்டது.
ஆனால், பாஜகவை பொறுத்தவரை, தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்யும் அளவுக்கு, போதிய அளவு வாக்குகள் இல்லை. அதிமுகவும் மூன்று அணிகளாக சிதறி கிடைப்பதால், அந்த கட்சியின் வாக்குகளை முழுமையாக நம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், எதிர் கட்சிகள் அனைத்தும் ஏற்கும் வகையில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளார் மோடி. அந்த பட்டியலில் திரௌபதி மர்மு, சுமித்ரா மகாஜன், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
ஆனால் திரௌபதி மர்முவே குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திரௌபதி மர்முவே, குடியரசு தலைவராக அறிவிக்கப்படுவார் என்று, கடந்த ஒரு வாரமாகவே, சமூக வலைத்தளங்களில் செய்திகளும் வலம் வர தொடங்கி விட்டன.
ஜார்கண்ட் மாநில ஆளுநராக உள்ள திரௌபதி மர்மு, ஒடிஷா மாநில பழங்குடி வகுப்பை சேர்ந்தவர். பாஜக வை சேர்ந்தவர் என்றாலும், சிறந்த நாடாளுமன்றவாதி என்று பெயர் எடுத்தவர்.
ஆகவே, திரௌபதி மார்முவை குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தினால், எதிர்க்கட்சிகள், அதை எதிர்க்காமல் வேறு வழியின்றி ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் என்று கணக்கு போட்டுள்ளது பாஜக.
அதன் காரணமாக, கருணாநிதியின் வைர விழாவை ஒட்டி, திரௌபதி மர்மு சார்பில், வாழ்த்து கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் மறுநாள், முரசொலியில் செய்தியாக வெளியிடப்பட்டது.
அத்துடன், கனிமொழியுடன், பாரதிய ஜனதா தலைவர்கள், தொடர்ந்து பேசிக்கொண்டு வருகின்றனர். அவர்களுடைய பேச்சை பார்க்கும்போது, அதிமுகவை நம்பி இனி பயன் இல்லை. உங்களுக்கும் எங்களுக்கும் எந்த பகை இல்லை என்ற பாணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்கும் நோக்கில், அதிமுகவை உடைத்த டெல்லி, அதை மீண்டும் ஓட்ட வைக்க முடியாமல் திண்டாடி வருகிறது.
அத்துடன், ஒருவேளை, அதிமுக அணிகள் இணைந்தாலும், மக்களால் ஏற்றுக் கொள்ள கூடிய தலைமை இல்லாததால், அதிமுகவை நம்பி இனி பயன் இல்லை என்ற முடிவுக்கு பாஜக வந்து விட்டதாகவே கூறப்படுகிறது.
அதனால், திமுகவை நெருங்கி வரும் பாஜக, இதில் உடன்பாடு ஏற்பட்டால், நாடாளுமன்ற தேர்தல் வரை அதை நீட்டித்து கொள்ளலாம் என்றே கணக்கு போட்டு செயல்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
http://kaalaimalar.in/bjp-dmk-planned-to-break-modi-plan/