செவ்வாய், 20 ஜூன், 2017

மூன்றே லட்ச ரூபாய்... முப்பதாண்டு ஆயுள்..! மூங்கில் வீடு கட்டலாமா?

மூங்கில்
ஹைதராபாத் நகரின் மையத்தில் இருக்கும் ஸ்வரூப் நகர் பஸ் ஸ்டாப்பை அன்று காலை அனைவரும் ஒரு நிமிடம் ஆச்சர்யமாகப் பார்த்து புன்னகைத்துக் கடந்தனர். பிளாஸ்டிக் வாட்டர்பாட்டில்களால் பின்னப்பட்ட நிழற்குடை ஒன்று அங்கே பிரமாண்டமாகக் காட்சியளித்தது. சுமார் 1000 வாட்டர்பாட்டிகளைக்கொண்ட அந்த நிழற்குடையைச் செய்தது, ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரசாந்த்- அருணா தம்பதியினர். இவர்கள்தான் இந்தியாவில் மூங்கில் வீடுகளை முதன்முதலாக அறிமுகம்செய்தவர்கள். அனுதினமும் ஆயிரக்கணக்கான டயர்களை எரிப்பதால், நகரில் நீடித்த காற்று மாசுபாட்டைத் தடுத்து, அந்த டயர்களை வீட்டுக்குத் தேவையான பொருள்களாக மாற்றலாம் என்று காட்டியவர்கள். மூங்கில் சைக்கிள்களை அறிமுகம்செய்தவர்கள் என இவர்களைப் பற்றி சொல்லிக்கொண்டேபோகலாம்.
வாட்டர்பாட்டில்களால் நிழற்குடை அமைக்கும் யோசனைக்கு வாழ்த்துகள் சொல்ல, பிரசாந்திடம் போனில் பேசினோம்.
’’2006ல் நான் அருணாவைத் திருமணம் செய்துகொண்டேன். அப்போது, மூங்கிலால் ஆன சோபா செட் ஒன்று வாங்க வேண்டும் என எங்கள் இருவருக்கும் ஆசை. ஹைதராபாத் முழுவதும் தேடினோம். கிடைக்கவில்லை. அந்த சோபா செட் தேடல் பயணம்தான் எங்கள் வெற்றிக்குக் காரணம்.’’ என ஆரம்பித்தார் பிரசாந்த்.
’’அந்த மூங்கில் சோபா செட் வாங்க, இந்தோ-பங்களாதேஷ் எல்லையில் இருக்கும் திரிபுரா மாநிலத்தின் காத்லாரா என்ற  கிராமத்துக்குச் சென்றோம். அந்தக் கிராமம் முழுவதுமே மூங்கிலால் கலைப்பொருள்கள் செய்கிறார்கள். பார்க்க பிரமிப்பாக இருந்தது. முதன்முதலாக  ஒரே வேலையை ஒரு கிராமமே செய்வதைக் கண்டு திகைத்துப்போனோம். சோபா செட்டை வாங்கும் எங்கள் பயணத்துக்கு அதிகப் பணம் செலவானது. எப்படியோ வாங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியைவிட, அதிக கேள்விகள்தான் எங்கள் இருவருடய மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்தன. அங்கே, நாங்கள் கண்ட மூங்கில் வீடுகளை இங்கே கொண்டுவந்தால் என்ன என்று தோன்றியது. மேலும், அந்தக் கிராமத்தில் இருப்பவர்கள் போதிய வருமானம் இல்லாமல் இருந்தனர். நாம், அவர்களுக்கும் வேலை கொடுக்கலாம். மூங்கில் வீடுகளை ஹைதராபாத் போன்ற நகரங்களில் அறிமுகம்செய்தால், மக்கள் விரும்புவார்கள் என்று நினைத்தோம். இந்த யோசனைக்கு, வீட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அப்போது, எங்களுக்குக் கல்யாணம் முடிந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நான், நல்ல நிறுவனத்தில் பணியில் இருந்தேன். என் மனைவி பிஹெச்.டி படிக்கத் திட்டமிட்டிருந்தார். குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி, மூங்கில் பற்றித் தெரிந்துகொள்ள வடகிழக்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவின் பல பகுதிகளுக்குப் பயணம்செய்தேன்.
ஒருவருடத் தேடலுக்குப் பின்னர், 2008ல் ஹைதராபாத்தில்  ஓர் இடத்தைக் குத்தகைக்கு எடுத்து, 20 வேலையாட்களைப் பணியில் அமர்த்தி, மூங்கில் கலைப்பொருள்களைச் செய்ய ஆரம்பித்தோம். ஆரம்பித்த உடனே, எங்களுக்குப் பெரிய சிக்கலாக அமைந்தது, இந்திய வனச் சட்டம் – 1927. இந்தச் சட்டம், மூங்கில் அறுவடை மற்றும் அதன் விற்பனையைச் சிக்கலாக்கிவைத்திருந்தது. அது, எங்களுக்குப் பெரிய அளவில் பின்னடைவைக்கொடுத்தது. பிறகு, மத்திய மாநில அரசுகளிடம் முறையான அனுமதி பெற்று, மூங்கிலைத் தடையின்றி வாங்கினோம்.
மூங்கில் பிரச்னை தீர்ந்தது என்று நினைக்கும்போதே, அடுத்த பிரச்னை உருவானது. நாங்கள் செய்த எந்தப் பொருள்களையும் யாருமே வாங்க முன்வரவில்லை. 2010 வரை சும்மாவே இருந்தோம். கடன் அதிகமானது. இந்த நேரத்தில், மூங்கில் பெறும் எங்கள் விண்ணப்பத்தை ரத்துசெய்துவிட்டார்கள். அவ்வளவுதான், எல்லாம் முடிந்துவிட்டது என்ற நிலை. ‘அடுத்து என்ன செய்யப்போகிறோம்?’ என்று தெரியவில்லை. எங்கள் குடும்பத்துப் பெரியவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தார்கள். நானும் அருணாவும் தந்தையை இழந்தோம். எங்களிடம் வேலைக்கு இருந்தவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். அவர்களுக்கு சம்பள பாக்கிகூட எங்களால் கொடுக்க முடியவில்லை.
மூங்கில்
இனி, நாம் உயிரோடு இருக்க வேண்டாம், தற்கொலைசெய்துகொள்ளலாம் என்றுகூட நினைத்தோம். எங்கள் குழந்தைக்காக அந்த எண்ணத்தைக் கைவிட்டோம். செய்வதறியாது நின்றுகொண்டிருந்த நேரத்தில், எங்களை ஒரு பள்ளி நிர்வாகம் தொடர்புகொண்டது. அவர்களின் பள்ளிக்கட்டடம் ஒன்றின் மேல், மூங்கில் வீடு கட்ட வேண்டும் என்று கேட்டார்கள். எங்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும், மறுபுறம் மூங்கில்கள் மற்றும் இதரப் பொருள்கள் வாங்க கையில் காசு இல்லை. என் மனைவி, அவருடைய நகைகளை என்னிடம் கொடுத்து, ‘இது நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. இதை நழுவ விடக்கூடாது. இந்த நகைகளை விற்று வேலையைத் தொடங்கலாம்’ என்றார். 60ஆயிரம் ரூபாய்க்கு அந்த நகைகளை விற்று, வேலையை ஆரம்பித்து விரைவாக முடித்துக்கொடுத்தோம்.
இதற்கு முன், அந்தக் கட்டடத்தில் ஒருவர் மூங்கில் வீடு அமைக்க முயன்று, அது மூன்று வாரங்களில் சரிந்தது எங்களுக்குத் தெரிந்தது. அதனால், எங்கள் வேலையின் தரம் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஒரே ஆண்டில், 150 வேலைகள் கிடைத்தன. இதுவரை ஆயிரக்கணக்கான மூங்கில் வீடுகளைக் கட்டியிருக்கிறோம். கிடைத்த ஒவ்வொரு வேலையையும் ரசித்துச்செய்கிறோம். விடா முயற்சியாலும் ஆர்வத்தாலுமே இன்று இந்த உயரத்துக்கு வர முடிந்தது’’ என்று சொல்லி நெகிழச்செய்தார் பிரசாந்த்.
 “மூங்கில் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் இந்தியாவில், ஒரு மூங்கில் வீடு செய்ய மூன்றிலிருந்து நான்கு லட்சம் வரை செலவு பிடிக்கும். இந்த வீடுகளின் ஆயுட்காலம், சுமார் 30 வருடங்கள். பராமரிப்பை அதிகப்படுத்தினால், இன்னும் 10 வருடங்களுக்குக்கூட இருக்கும். இப்போது, நாங்கள் அறிமுகம்செய்தது, வாட்டர்பாட்டில்களைக்கொண்டு கூரை அமைப்பது. உங்கள் வீட்டு மொட்டைமாடியில், எளிமையாக ஒரு கூரை அமைக்கலாம். அந்த பிளாஸ்டிக் கூரைகள், குளுமையான சூழலை உருவாக்கும்.
அருணா
லாப நோக்கோடு நாங்கள் இதுவரை செயல்பட்டதே இல்லை. மூங்கில் வீடுகளால் சுற்றுச்சூழலுக்கு நன்மைசெய்கிறோம். மேலும், பள்ளி, கல்லூரிகளில் மூங்கில் பயன்பாடுகுறித்தும், அதை வைத்து எப்படி நமக்குத் தேவையான பொருள்களைச் செய்வது என்பது குறித்தும் இலவசமாக பயிற்சி கொடுக்கிறோம். ஹைதராபாத் மாநகராட்சியுடன் இணைந்து, நகரில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்த டயர் எரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்த டயர்களால் நாற்காலி, செடிகளை வளர்க்கும் தொட்டி போன்றவை செய்துகொடுக்கிறோம். மக்களுக்கு சுற்றுச்சூழல்குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறோம். தொடர்ந்து சுற்றுச்சூழல் பற்றியே சிந்திப்பது, ஒரு வித மன நிறைவைத் தருகிறது’’ என்று நிறைவாக முடித்தார் பிரசாந்த்.

Related Posts: