வியாழன், 1 ஜூன், 2017

கால்வாயில் கொட்டப்பட்ட அனல்மின் நிலைய நிலக்கரி கழிவு! June 01, 2017

கால்வாயில் கொட்டப்பட்ட அனல்மின் நிலைய நிலக்கரி கழிவு!


பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்ட வடசென்னை அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பலை உத்தரவிற்கு பிறகும் அகற்றாததால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக  மேலாண்மை இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூருக்கு அருகில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் நிலக்கரி சாம்பலை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகம், அனல்மின் நிலையத்திற்கு அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் கொட்டுகிறது. 

இதனை தடுக்க நடவடிக்கைகோரி ரவிமாறன் என்பவர் பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ஏற்கெனவே தீர்ப்பாயம் உத்தரவிட்டும் சாம்பல் கொட்டுவதை நிறுத்தாதது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர், ஜூலை 13ம் தேதி நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் எனவும், சாம்பல் கொட்டப்பட்டதற்கு காரணமாக அதிகாரிகள் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த இடைப்பட்ட காலத்தில் கொட்டப்பட்ட அனைத்து சாம்பலையும் அகற்ற வேண்டும் எனவும் நீதிபதி ஜோதிமணி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.