வெள்ளி, 16 ஜூன், 2017

தீண்டாமையை சமாளிக்க அதிரடி முடிவு எடுத்த கிராம மக்கள்! June 16, 2017




கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் கிராமத்தில், ஆதிக்க சாதி மக்களின் சடலங்களை அடக்கம் செய்ய தலித் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மறுத்துள்ளனர்.

கோவிந்தபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் காலனி பகுதி மக்கள்  பல வருடங்களாக தீண்டாமை கொடுமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் வாழும் ஆதிக்க சாதி மக்கள் தலித் மக்களிடம் எந்த ஒரு பேச்சு பரிமாற்றமும் இன்றி இருந்துள்ளனர். ஆனால், ஆதிக்க சாதி சமூகத்தில் எவரேனும் இறந்தால்,  அதை அடக்கம் செய்ய மட்டும் தலித் மக்களின் உதவியை நாடுகின்றனர்.

1982 ல் உருவான அம்பேத்கர் காலனியில், தற்போது  133 தலித் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில் இருக்கும் தேநீர் கடைகளில், ஆதிக்க சாதி மற்றும் தலித் மக்களுக்கு தனி தனி டம்ளர்கள் உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கிராமத்து கோவில்களுக்குள் செல்ல அனுமதி இல்லை. அரசு தரப்பில் இருந்தும் இந்த சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு எந்த ஒரு ஆதரவும் கிடைப்பதில்லை. 

இவ்வாறாக தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்தமையால், கோவிந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆதிக்க சாதி மக்களின் உடல்களை இனிமேல் அடக்கம் செய்ய போவதில்லை என தீர்மானித்துள்ளனர். தொடர்ந்து எங்களை தீண்டதகாதவர்களாக பாவிக்கும் மக்களுக்கு, அவர்கள் இறந்த பின்னர் உதவ வேண்டுமா? என கேள்வி எழுப்புகின்றனர் அம்பேத்கர் காலனி மக்கள்.

Related Posts: