வியாழன், 22 ஜூன், 2017

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை தமிழகத்திலேயே ஆய்வு செய்ய நடவடிக்கை! June 22, 2017

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை தமிழகத்திலேயே ஆய்வு செய்ய நடவடிக்கை!


கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை, தமிழகத்திலேயே ஆய்வு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் கீழடி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதாகவும், அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால பொருட்களை பாதுகாக்க, தமிழக அரசு ஏற்கனவே 72 சென்ட் இடம் வழங்கியுள்ளதாகவும், மேலும் 2 ஏக்கர் நிலம் வழங்க அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். 

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்காக மைசூர் எடுத்து செல்ல முயற்சித்த போது, அதை தடுக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.

மேலும், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை, தமிழகத்திலேயே ஆய்வு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts: