வியாழன், 22 ஜூன், 2017

ஆசிரியர்கள் இல்லாததால் மூடப்பட்ட அரசுப்பள்ளி வகுப்புகள்! June 22, 2017

ஆசிரியர்கள் இல்லாததால் மூடப்பட்ட அரசுப்பள்ளி வகுப்புகள்!


திருப்பதியில் 48 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ் வழிப் பள்ளிக்குப் புதிதாக ஆசிரியர் நியமிக்கப்படாததால் அந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி லட்சுமிபுரம் கென்னடி நகரில் 1969ஆம் ஆண்டு தமிழ் ஆர்வலர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையுள்ள தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினர். பின்னர் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளிக்குப் புதிதாக ஆசிரியர்களை நியமிக்காததால் இந்த ஆண்டு 8, 9, 10ஆம் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏழாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 9 பேருக்கு இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க ஆர்வமிருந்தும் ஆசிரியர் இல்லாததால் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த காலங்களில் முந்நூறு மாணவர்கள் வரை படித்து வந்த இந்தத் தமிழ்வழிப் பள்ளியில் இப்போது 38 பேர் மட்டுமே படித்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் விரைவில் இந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்படும் என்று திருப்பதி தமிழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

மூன்றாண்டுகளுக்கு முன்பு நாடார் சங்கத்தினர் இந்தப் பள்ளிக்கு ஒரு ஆசிரியரை நியமித்துள்ளனர். மாநகராட்சி சார்பில் மாணவர்களுக்குப் புத்தகம், சீருடை, சத்துணவு ஆகியவை வழக்கம் போல் வழங்கப்படுகிறது. காலியாகும் இடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்காமல் ஆந்திர அரசு புறக்கணித்து வருதாக புகார் எழுந்துள்ளது.   

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. எனவே  திருப்பதியில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் தமிழில் பாடம் படிக்க ஆசிரியரைப் பணியமர்த்த ஆந்திர அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் திருப்பதி வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: