ஞாயிறு, 9 ஜூலை, 2017

கதர் ஆடைகளுக்கு 5 முதல் 18% ஜிஎஸ்டி! July 09, 2017

கதர் ஆடைகளுக்கு 5 முதல் 18% ஜிஎஸ்டி!


இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு முதன்முறையாக கதர் ஆடைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு அரசு மூலம் வசூலிக்கப்பட்ட அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாகவும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை கொண்டுவரப்பட்டது. இந்த புதிய வரிவிதிப்பினால் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இந்நிலையில், கதர் ஆடைகளுக்கும் 5 முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த ஒருவாரமாக அதன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கதர் ஆடைகளின் மீது வரிவிதிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இருப்பினும் காந்தி தொப்பிக்கும், தேசிய கொடிக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேரு அங்கி, குர்தா பைஜாமா உள்ளிட்ட மற்ற அனைத்து கதர் ஆடைகளுக்கும் 5 முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து கருத்து தெரிவித்த கதர் ஆடை வியாபாரிகள், “ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து எங்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாதராண ஆடைகளுக்கு 5 சதவீத வரியும், 1000 ரூபாய்க்கு மேல் உள்ள ரெடிமேட் கதர் ஆடைகளுக்கு 12 சதவீத வரியும், பாலிஸ்டர் கலந்த கதர் ஆடைகளுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளை விட ஆடைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்கள்தான் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

கதர் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை விமர்சித்த காங்கிரஸ் தலைவர்கள், “ கதர் ஆடைகள் என்பது இந்தியாவின் ஆன்மா போன்றது. பாஜக ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதில்லை.  கதர் ஆடைகள் மீது வரிவிதிக்கும் பாஜகவின் எண்ணவோட்டத்தை இதைவைத்தே நாம் புரிந்துகொள்ளலாம்” என தெரிவித்துள்ளனர்.

Related Posts: