வெள்ளி, 28 மே, 2021

திமுக அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள்: ஓபிஎஸ் திடீர் பாராட்டு

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க ஆளும் திமுக அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த தடுப்பு நடவடிக்கையில், ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அம்மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏக்ள், அரசு அதிகாரிகள் இணைந்து கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,தமிழகத்தில், முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ஆண்டிபட்டி தொகுதி எம்எல்ஏ மகாராஜன், கம்பம் தொகுதி எம்எல்ஏ  கம்பம் ராமகிருஷ்ணன், பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ சரவணகுமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஒ.பன்னீர்செல்வம் கூறுகையில்,,

தமிழகத்தி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்ட நிலையில்,  அம்மாவின் அரசு எடுத்த பல நடவடிக்கையால்  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதன் பாதிப்பு மிகவும் குறைந்த அளவில் இருந்தது. ஆனால் தறபோது மீண்டும் இந்த வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதையும் இப்போது ஆட்சியில் இருக்கும் அரசு சவாலாக எடுத்து, பாதிப்பைக் குறைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

கொரோனா தொற்று என்ற தேசிய பேரிடர், அரசுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம் என்றால் இந்த வைரஸை நாட்டில் இருந்து முழுமையாக துடைத்து அகற்ற முடியும். இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உயிர்களைக் காக்கும் கடமை உணர்வு நம் அனைவருக்கும் உள்ளது. இந்த இரண்டாவது அலையின் தாக்கம், நகர் பகுதிகளைவிட கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் இருக்கிறது. தேனி மாவட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று வரும் லாரி ஓட்டுநர்கள், தொழிலாளர்களுக்கு உடனடியாக உரிய பரிசோதனை நடத்த வேண்டும்.

மேலும் தேனியில் இருந்து கேரளாவுக்குத் தினமும் விவசாயப் பணிகளுக்காகச் செல்லும்  விவசாயிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். கர்ப்பிணிகள் கர்ப்ப காலம்முதல் பிரசவ காலம்வரை அவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.  நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கொரோனா தடுப்புப் பணியை மிகப் பெரிய விழிப்புணர்வு இயக்கமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த கொரோனா தொற் காலத்தில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சையைத் தொடர்ந்து தற்போது மஞ்சள் பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்படுகிறது.  இந்த நோய் பாதிப்பு கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வையை இழக்கும் சூழல் உள்ளதால் இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு கவனமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பைத் தடுக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் உறுதுணையாக இருப்போம்” என்று கூறியுள்ளார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/former-deputy-cm-ops-congratulates-to-dmk-government-307844/