ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய கதிராமங்கலம் மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் பதித்த குழாய் உடைந்து, எண்ணெய் கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக மக்களின் நியாயமான உணர்வுகளை அலட்சியப்படுத்தி, மக்கள் போராட்டத்தை கிள்ளுக்கீரையாக கருதி, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயல்வதாக குற்றம்சாட்டினார். எனவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும் எனவும், அதைவிடுத்து காவல்துறையை கொண்டு மக்களை மிரட்டுவது சரியான அணுகுமுறை கிடையாது எனவும் குறிப்பிட்டார்.