செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பெருமை: சோனியா காந்தி

வேற்றுமையும், பன்முகத்தன்மையுமே இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை ஒட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், கடந்த 75 ஆண்டுகளில் அறிவியல், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டி சர்வதேச அரங்கில் முத்திரை பதித்த நாடு இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படையான, நேர்மையான தேர்தல் முறையை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறியுள்ள சோனியா காந்தி, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்களால்தான் இது சாத்தியமாயிற்று என தெரிவித்துள்ளார். ஜனநாயகம் வலிமையாக இருக்கவும், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட பல்வேறு அமைப்புகள் வலிமையுடன் இயங்கவும் வழி ஏற்பட்டதற்கு நமது நாட்டிற்கு கிடைத்த மாபெரும் தலைவர்களே காரணம் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வலிமையான பின்னணியோடு, வேற்றுமையும், பன்முகத்தன்மையும் இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களாகத் திகழ்ந்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் மாபெரும் தேசியத் தலைவர்களான காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களின் தியாகங்களை, தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக இருட்டடிப்புச் செய்பவர்களாக தற்போதைய ஆட்சியாளர்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டிய சோனியா காந்தி, வரலாற்று உண்மைகளை யாராலும் ஒருபோதும் மறைத்துவிட முடியாது என்றார்.

அதேநேரத்தில், மூவர்ணக் கொடியை நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் ஏற்ற அனுமதிக்கப்பட்டதையும், மக்கள் மகிழ்ச்சியோடு தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடிகளை ஏற்றியதையும் சுட்டிக்காட்டி அவர் பாராட்டு தெரிவித்தார்.


source https://news7tamil.live/india-has-made-its-proud-identity-as-its-pluralism-and-diversity.html