செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்-முரசொலி தலையங்கம்

 

16 08 2022 பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம் என்று முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நேருவின் தியாக வரலாற்றை மறைக்க நினைக்கின்றனர். நாளை தேசத் தந்தை காந்தியும், இருட்டடிப்புக்கு ஆளாகலாம்!

இந்திய சுதந்திரத்தையும் சுபிட்சத்தையும் மோடியும், அமித்ஷாவும்தான் அரும்பாடுபட் டுக் கொண்டு வந்தனர் என்றுகூட வரலாற்றுத் திருத்தங்கள் உருவாக்கப்படலாம்; இது சாத்தியமா? எனக் கேட்கலாம். அப்படியும் செய்வார்களா? என அதிசயிக்கலாம்.

பாஜக ஆட்சி தொடர்ந்தால் இங்கு எதுவும் நடக்கலாம்! மத்திய அரசின் சார்பில் ஏடுகளில், 75-வது சுதந்திர தினத்தை ஓட்டி வந்த விளம்பரங்களைப் பலரும் பார்த்திருக்கக்கூடும்! அதிலே பிரதமர் மோடிதான் காட்சி தருகிறார்.

சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் பிறந்தே இராத மோடி – அதாவது 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1950-ஆம் ஆண்டில் பிறந்த மோடியின் படம், இந்திய அரசு வரிப் பணத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் வந்துள்ளதே தவிர, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், தியாகிகள் யார் படமும் இடம் பெறாத அவல நிலை தான் உள்ளது!

பிரதமர் மோடி

‘தேசப்பிதா’ என்று போற்றிப் பாராட்டப்படும் உத்தமர் காந்தி படத்தைக் கூட அந்த விளம்பரத்தில் பதிக்கவில்லை!

இந்திய நாட்டின் பிரதமர், சுதந்திர நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது அந்த விளம்பரத்தில் மற்றவர்கள் படம் வேண்டாம்; காந்தியார் படமாவது இடம் பெற்றிருக்க வேண்டாமா?

இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் போராடிய காலகட்டத்தில் சர்வ வல்லமை படைத்த பிரிட்டிஷ்காரனும் செய்யத் துணியாத காரியத்தை – சுதந்திர இந்தியாவில் ஒரு இந்தியன், மதவெறி கொண்ட இந்தியன் செய்தான்; அதனால் சாய்ந்தார் மகாத்மா காந்தி!

அந்த மாமனிதர் போராடிப் பெற்ற சுதந்திர இந்தியாவில் அவர் கொல்லப்பட்டார்; அந்தக் கொலைகார கும்பலுக்கு ஆதரவாக நாட்டிலே சில இடங்களிலே கோட்சே துதிபாடும் கூட்டம் இருக்கும் நிலையில், இந்த 75வது சுதந்திர நாள் காந்தியாருக்குச் செலுத்த வேண்டிய நன்றிக் கடனைச் செலுத்தாததும் – அர்ப்பணிப்பு உணர்வோடு காந்தியுடன் கடைசிவரை இருந்த நேரு போன்றவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தாததும்; வரலாற்றுக் களங்கங்கள்! இவர்களைத் தான் ‘நடிப்புச் சுதேசிகள்’ என்று அன்றே பாரதியார் பாடினாரோ!

செருப்பரசியலும் வெறுப்பரசியலும் 

கலவரங்களின் மூலமாக குழப்பங்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வதைத் தவிர வேறு எதுவும் மதவாத சக்திகளுக்கு – திராவிட இயக்க எதிரிகளுக்குத் தெரியாது.

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் மீது இன்றும் செருப்பு வீசுகிறார்கள் என்றால் அவர்கள் செருப்பைத் தாண்டி வளரவில்லை, வளரத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க.வுக்குத் தெரியாது என்பது தெரிகிறது. இத்தகைய கலாச்சாரத்தைத் தான் தங்களது கலாச்சாரமாக ஆக்க நினைக்கிறார்கள்.

பட்டவர்த்தனமாக பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி டுவிட்டர் பதிவுகளைப் போடுகிறார். இன்னமும் யூனிபார்ம் போட்ட போலீஸைப் போலவே நிருபர் கூட்டங்களை நடத்துகிறார்.

வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாகச் சொல்கிறார். பெரியாரை மதிக்கிறேன் என்று ஒரு பக்கமும் சிலையை உடைப்பேன் என்பவருக்கு மறுபக்க ஆதரவும் கொடுத்து வருகிறார்.

கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று தெரியாமல் எப்படியாவது வளர்த்துவிடத் துடிக்கிறார்.

ஆத்திரம் கண்ணை மறைப்பதால் அராஜக அரசியலுக்கு தூபம் போட்டு தன்னை நோக்கி கவனம் ஈர்ப்பதற்கு வன்முறைப்பாதையை ஊக்கப்படுத்துகிறார்.

தேசத்துக்கும், தேசபக்திக்கும், விடுதலைப் போராட்டத்துக்கும், தியாகத்துக்கும், இந்தக் கூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது அவர்க்கும் தெரியும்.

ஆண்டுதோறும் ஏதாவது ஒரு பம்மாத்தை காண்பித்து தனது மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்பிக் கொள்வது பா.ஜ.க.வுக்கு வாடிக்கை.

தேசியக் கொடி ஏற்றிய காரில், சுதந்திரத்தினத்துக்கு இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் செருப்பு வீசுவதன் மூலமாக இவர்கள் நடத்த இருப்பது செருப்பரசியலும் வெறுப்பரசியலும் தான் என்பது அம்பலமாகிவிட்டது.

அமைதிப்பூங்காவான தமிழகத்தில் அராஜகம் விதைக்க நினைப்பவர்கள் வீழ்வார்கள் என்பதே கடந்த கால வரலாறு என்று முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/anything-can-happen-here-if-bjp-rule-continues-murasoli-editorial.html

Related Posts: