செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

சுதந்திர போராட்ட தியாகிகளை சிறுமைப்படுத்த அனுமதியோம்: சோனியா காந்தி

 

Self-absorbed trivialising freedom struggle
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

நாட்டின் பிரிவினையில் ஜவஹர்லால் நேருவின் பங்கு குறித்து பாரதிய ஜனதா ஆக.14ஆம் தேதி கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு இன்று (ஆக.15) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதிலளித்துள்ளார்.
அப்போது, ‘கட்சியின் அரசியல் லாபத்துக்காக தேசத் தலைவர்களை, நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளை சிறுமைப்படுத்த எவரையும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சோனியா காந்தி கடிதத்தில், “கடந்த 75 ஆண்டுகளாக நாங்கள் நிறைய சாதித்துள்ளோம். ஆனால் தற்போதைய சுயராஜ்ஜிய அரசாங்கம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் புகழ்பெற்ற சாதனைகளையும் சிறுமைப்படுத்துவதில் முனைப்பாக உள்ளது என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் நலன்களுக்காக வரலாற்று உண்மைகளை தவறாக சித்தரிப்பதை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல் மற்றும் மௌலானா ஆசாத் போன்ற பெரிய தேசிய தலைவர்களை பொய்களின் அடிப்படையில் நிறுத்துகிறது.

இந்த அறிக்கை எந்த விவரங்களுக்கும் செல்லவில்லை என்றாலும், இது பிரிவினை குறித்த பாஜகவின் குற்றஞ்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் இருந்தது. முன்னதாக ராகுல் காந்தி முகநூலில், “நாங்கள் எப்போதும் நாட்டுக்கு சேவை செய்வோம். மதம் மற்றும் சாதியின் பெயரால் பிளவுகளை அனுமதிக்க மாட்டோம். இது எங்களின் சபதம்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினை தினமாக அனுசரிப்பது அதிர்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் சோனியா காந்தி அறிக்கையில், “அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் சர்வதேச அரங்கில் நாடு தனது திறமையான மக்களின் கடின உழைப்பின் மூலம் அழியாத முத்திரையை பதித்துள்ளது” எனவும் தெரிவித்திருந்தார்.

சோனியா காந்தி தற்போது கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். இதனால் காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் அம்பிகா சோனி தேசியக் கொடி ஏற்றினார்.
அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உடனிருந்தார். மேலும் சுதந்திர போராட்டத்தின் ஒருபகுதியாக காங்கிரஸ் தலைவர்கள் காந்தி சமாதி நோக்கி பேரணி சென்றனர்.

source https://tamil.indianexpress.com/india/self-absorbed-trivialising-freedom-struggle-sacrifices-indias-achievements-sonia-494860/