குஜராத் கலவர வழக்கில் (பில்கிஸ் பானு) கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்த 11 தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி நடந்த கலவரத்தின்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
மேலும் பில்கிஸ் பானுவின் 3 வயது மகள் உள்பட 14 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பில்கிஸ் பானு, குற்றவாளிகள் 14 பேரையும் அடையாளம் காட்டினார்.
பின்னாள்களில் வழக்கின் தீவிரம் கருதி வழக்கு சிபிஐ விசாரணைக்கு சென்றது. மேலும் குஜராத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு மகாராஷ்டிரா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 14 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் வழக்கில் பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றவாளிகள் 14 பேரில் மூவர் மரணித்துவிட்டனர். தொடர்ந்து, 11 பேரும் 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர். தற்போது அவர்களின் ஆயுள் தண்டனை காலம் நிறைவுற்றது.
இதையடுத்து 11 பேரும் விடுதலை கோரி விண்ணப்பம் அளித்தனர். இதனை பரிசீலித்த சிறை நிர்வாகம், கைதிகளின் நன்னடத்தை கருதி விடுவிக்கலாம் என மாநில அரசுக்கு பரிந்துரைத்தது.
மாநில அரசின் பரிந்துரையை ஏற்று, தண்டனை கைதிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் பில்கிஸ் பானுவின் சாட்சியங்கள் பெரும் திருப்புமுனையாக அமைந்தன. குற்றவாளிகள் 14 பேரில் பலர் பில்கிஸ் பானுக்கு நன்று அறிமுகமானவர்கள் ஆவார்கள். இதனால் பில்கிஸ் பானு எளிதில் அடையாளம் காட்டினார்.
எனினும் நாளடைவில் பில்கிஸ் பானுவின் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்தது. இதனால் மாநில அரசு அவருக்கு பாதுகாப்பு அளித்தது.
11 பேரின் விடுதலை குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் குஜராத் கூடுதல் தலைமை செயலர் (உள்துறை) ராஜ் குமார் கூறுகையில், “குற்றவாளிகள் 11 பேரும் தண்டனை காலத்தை நிறைவு செய்துள்ளனர். இதனால் அவர்களின் வயது, குற்றப் பின்னணி மற்றும் சிறைக்குள் நன்னடத்தை ஆகியவற்றை கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/bilkis-bano-case-11-lifers-convicted-for-gujarat-riots-gangrape-murder-set-free-in-godhra-495118/