வெள்ளி, 7 ஜூலை, 2017

விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு! July 07, 2017

விவசாயிகளிடம் கடன் வசூல் நடவடிக்கையில் வங்கிகள், கடுமை காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் வறட்சியின் காரணமாக 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில், விவசாயிகள் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக பொதுநல வழக்காடு மன்றம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஷ்ரா அடங்கிய அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டு திட்டங்களை வியாபார நோக்கத்தில் செயல்படுத்தக் கூடாது என்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

மற்றொரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராஜாராமன், வங்கிகள் விவசாயிகளிடம் கடுமை காட்டுவதாக தெரிவித்தார். வங்கிகள் கடுமை காட்டுவதை ஏற்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,  உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வழங்கிய பரிந்துரைப்படி எவ்வாறு நடக்கலாம் என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கை வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.