செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாக நாடாளுமன்றக் குழு முன்பு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாகவும், அந்த பணி இன்னும் முடிவடையவில்லை என்றும் தெரிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன்பு, நாட்டில் 17 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாகவும், தற்போது 15 லட்சம் கோடி புழக்கத்தில் இருப்பதாகவும் உர்ஜித் பட்டேல் கூறினார்.
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் 2வது முறையாக நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.