05 09 2021 ஒன்பது மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் 35 நாட்கள் அவகாசம் கோரியுள்ளது. இந்த தேர்தல்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஜூன் 26 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, ஆனால் தேர்தலை முடிக்க இன்னும் 35 நாட்கள் தேவை என்று மாநில தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுப் பற்றி விவாதித்தது. ஏற்கனவே, ஒன்பது மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியலை ஆணையம் வெளியிட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அதிமுக தலைவர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் குழுக்களை அமைப்பதாக கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதேபோல், திமுகவும் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை அறிவிக்க ஏழு மாத கால அவகாசம் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு, டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த தனது துறை தயாராகி வருவதாக கூறியிருந்தார்.
இப்போது, கடந்த வாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மேலும் கால அவகாசம் கோரியுள்ளது. அதேநேரம், புதிதாக ஆறு மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகளை உருவாக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை வார்டு வரையறை போன்ற பயிற்சிகள் முடிந்தால் மட்டுமே நடத்த முடியும்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/the-state-election-commission-asks-for-a-35-day-to-hold-local-elections-338984/