Bharat Bandh : மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடை அடைப்பு போராட்டங்களை நடத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல மாநில விவசாயிகள் ஆதரவு அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு நாடு தழுவிய போராட்டம் ஆரம்பமானது.
பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தன்னுடைய ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதே போன்று பிகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ் இன்று நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் ஆந்திரபிரதேச அரசுகள் தங்களின் ஆதரவை இந்த போராட்டத்திற்கு அளித்துள்ளன.
இன்று நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக டெல்லியில் இருந்து காஜிப்பூர் வழியாக உத்தரப்பிரதேசம் செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது என்று டெல்லி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
ஆதரவு தரும் வங்கிகள் சங்கம்
அனைத்து இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் தங்களின் ஆதரவை இந்த நாடு தழுவிய போராட்டத்திற்கு வழங்கியுள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரித்துள்ள சங்கத்தினர் அரசு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமூக முடிவை எட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரளாவில் பேருந்துகள் ஓடாது
கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சி இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. சி.பி.ஐ(எம்)-ன் செயலாளரான ஏ. விஜயராகவன் இந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். கேரளாவில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/bharat-bandh-today-farmers-protest-across-the-country-347091/