தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் 850 மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த 2006ம் ஆண்டு வருமுன் காப்போம் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் தொடங்கி வைத்தார். பின்னர் வந்த அதிமுக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாக கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் தலா 150 மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மருத்துவக்கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
source https://news7tamil.live/student-enrollment-in-newly-started-medical-colleges.html
28.09.2021