சனி, 25 செப்டம்பர், 2021

கொரோனா: டெல்டா மாறுபாடு குழந்தைகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா? 24 09 2021

delta variant

கொரோனா வைரஸின் முந்தைய மாறுபாடுகளை விட டெல்டா மாறுபாடு குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு வலுவான சான்றுகள் இல்லை என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும் டெல்டா மாறுபாடு அதிகம் தொற்றும் தன்மை கொண்டதால் குழந்தைகளிடம் அதிகம் பரவுகிறது.

டெல்டா வைரஸ் எளிதில் பரவும் திறன் கொண்டது என்பதால் குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. தொற்று அதிகரிப்பது பள்ளிகளில் மாஸ்க் அணிவது, தடுப்பூசி போடுவதன் அவசியத்தை காட்டுகிறது என புளோரிடாவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அனைத்து குழந்தைகள் மருத்துவமனையின் தொற்று நோய் மருத்துவர் டாக்டர் ஜுவான் டுமாய்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க குழந்தைகள் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கத்தின் தரவுகளின்படி, இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க குழந்தைகளில் வாராந்திர தொற்று விகிதங்கள் 2,50,000 ஐ தாண்டியுள்ளது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, டெல்டா மாறுபாடு குறைந்தது 180 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இளம் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரிடையே தொற்று அதிகம் பரவுவதால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் அதிகரிக்கிறது.

அமெரிக்காவில் ஆகஸ்ட் மாதத்திற்கு பின் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் விகிதம் 1,00,000 குழந்தைகளில் 2 பேர் என்ற அளவில் குறைவாக இருந்தது என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தகவல் தெரிவிக்கிறது. ஆனால் கடுமையான நோயால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை.

டெல்டா மாறுபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது போன்று தோன்றினாலும் அப்படி இல்லை என்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு லேசான தொற்று அல்லது அறிகுறிகள் இல்லை என்றால் மருத்துவமனையில் சேர்க்க தேவையில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

டெல்டா வைரஸ் தொற்றிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் பாதுகாக்கிறது. 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகள் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகம் மருத்தவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

source https://tamil.indianexpress.com/explained/is-the-delta-variant-of-the-coronavirus-worse-for-kids-345965/