புதன், 29 செப்டம்பர், 2021

பத்திரிகையாளர்கள், சீமானின் தாயார், சுப.வீரபாண்டியன் குறித்து சர்ச்சை கருத்து;

 பத்திரிகையாளர்கள் குறித்தும், சீமானின் தாயார் குறித்தும், சுப.வீரபாண்டியன் குறித்தும் சர்ச்சை கருத்துக்களை கூறிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா-வுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் வலுத்து வருகிறது.

’திரௌபதி’ பட புகழ் மோகன் இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் சிறப்புக் காட்சி ஒளிப்பரப்பபட்டது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் சில இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டனர்.

படத்தின் சிறப்புக் காட்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, ருத்ரதாண்டவம் படம் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த ஹெச்.ராஜா, “ஹிந்து இல்லாவிட்டால் தமிழ் எங்கிருந்து வந்தது? என்ன பேசுறீங்க எல்லாரும், இதுக்குதான் சொல்றேன், you all media people Presstitues (ஊடகவேசிகள் அல்லது பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் ஒருபக்க சார்புடையவர்கள்). தமிழ் வேற இந்து வேறன்னு பேசக்கூடிய அளவுக்கு நீங்க வேணும்னே மதமாற்றத்திற்கு துணை போக வேண்டாம்னு நான் உங்களைக் கேட்டுக்கிறேன். Don’t become addict to conversion” என்று ஆவேசமாக கூறினார்.

அப்போது மற்றொரு செய்தியாளர், சீமான் கூட இதே கருத்தை முன்வைக்கிறார் என்றதும், உடனே ஹெச்.ராஜா, “Who is Seeman? (சீமான் யார்?) சீமானோட அம்மா முதல்ல தமிழச்சியா? சொல்லுங்க சார், அன்னம்மா தமிழா? இல்லை. She is a malayali (அவர் ஒரு மலையாளி). அட என்னை பிஹாரிங்கிறான் ஒரு முட்டாள். அதனால், ஊடகங்களில் இனி ‘தமிழ் இந்து’ என்றெல்லாம் பேசாதீர்கள்” என்றார்.

அடுத்ததாக ஆரியர் வருகை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பியதும், “சுப. வீரபாண்டியனின் மூளை dust binஆ (குப்பை தொட்டியா) போச்சுதுன்னா, ஆரியன் இன்வேஷனா? (வந்தேறிகளா) அதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு? அதனால், Don’t spread lies (பொய்களை பரப்பாதீர்கள்). சுப. வீரபாண்டியனே அறிவாலயம் வாசல்ல உட்கார்ந்திருக்க பிச்சைக்காரன்” என்று ஹெச்.ராஜா சுப.வீ-ஐ சாடினார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சின் வீடியோவை, “Who is சீமான்? நிரூபரை வச்சு செய்த ஹெச்.ராஜா” என்று தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

ஹெச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து அநாகரிமாகப் பேசிவரும் பாஜக பிரமுகர் எச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் சமீபகாலங்களில் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதல்களுக்கு எளிய இலக்காகப் பத்திரிகையாளர்கள் ஆளாகி வரும் கொடுமையான போக்கு அதிகரித்து வருகிறது. இது மிக ஆபத்தானது மட்டுமல்ல, கருத்துரிமையில் நம்பிக்கை உள்ள அத்தனை ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும்.

செய்தியாளர்களைச் சந்திக்கும் பல சந்தர்ப்பங்களில், வாய்க்கு வந்தபடி வசவுச் சொற்களைப் பண்பாடு இன்றிப் பயன்படுத்தி வருகிறார் பாஜக பிரமுகர் எச்.ராஜா. நேற்றைய தினம் (27-09-2021 ) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிகழ்வில் எச்.ராஜா, செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கலாம் அல்லது தவிர்த்திருக்கலாம். ஆனால், நிதானம் தவறி, Presstitute – ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து ஏசியுள்ளார். எச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும், செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு, நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எச்.ராஜா அவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, அவர்கள் எச்.ராஜாவின் இவ்விமர்சனங்களை ஏற்கிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் எச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

பத்திரிகையாளார்கள், ஊடகங்கள் விமர்சனங்களுக்கு உட்பட்டதே. ஆனால், அவை நேர்மையானதாக,  தரமானதாக இருக்கட்டும். மாறாக, அவதூறுகளால், மிரட்டல்கள், வாய்ப்பூட்டு போட நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

தொடர்ந்து ஊடகத்துறையினர் மீது தொடுக்கப்படும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த ஊடக நிர்வாகிகள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம். இவ்வாறு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஹெச்.ராஜாவின் சர்ச்சைப் பேச்சுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும் தரம்தாழ்ந்து மிகக்கீழ்தரமாக பேசியுள்ள ஹெச்.ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து ஊடக நிறுவனங்களும் ஹெச்.ராஜாவை புறக்கணிக்க வேண்டும் மற்றும் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த அமைப்பு கோரியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவும் இதைக் கண்டிக்கும் வகையில், “ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் ரவுடி ஹெச்.ராஜா என்னும் நபரை குண்டர் சட்டத்தில் தளைப்படுத்த வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் குறித்துப் பேசியதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

source twitter.com/ 

https://tamil.indianexpress.com/tamilnadu/h-raja-controversial-comment-about-journalists-seemans-mother-suba-veerapandian-348006/