தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி சனிகிழமை (செப்டம்பர் 18) ஆளுநராக பதவியேற்கிறார். சனிக்கிழமை காலை ராஜ்பவனில் நடைபெறும் ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் என 500 பேர் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி விமானம் மூலம் நேற்று இரவு (செப்டம்பர் 16) சென்னை வந்தார். அவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோரும் வரவேற்றனர். தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள ஆர்.என்.ரவியை வரவேற்றனர். பின்னர் அங்குள்ள அறையில் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி உளவுத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். பீகார் மாநிலத்தைச் சேந்த ஆர்.என்.ரவி கடந்த 1976ம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார். மத்திய அரசு உளவு பிரிவின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த 2019ம் ஆண்டு முதல் நாகலாந்து மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி சனிக்கிழமை (செப்டம்பர் 18) ஆளுநராக பதவியேற்கிறார். ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் என 500 பேர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநராக பதவியேற்க உள்ள ஆர்.என்.ரவியை பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/new-governor-rn-ravi-tamil-nadu-take-office-18th-september-342568/