23 09 2021 அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது
பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது
திமுக தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று உறுதியளித்தது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு, அரசுப் பணியில் உள்ள பெண்கள் மகப்பேறு காலத்தில் ஓய்வெடுக்கவும் தாய்மார்கள் தங்கள் பச்சிளம் குழந்தைகளை காப்பதற்காக அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகப்பேறு கால விடுப்பு ஒவ்வொரு காலகட்டத்தில் அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது.
1980ம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டில் 6 மாதங்களாக உயர்த்தினார். இதனைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 6 மாதகால மகப்பேறு விடுப்பு காலத்தை 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்றுசட்டப்பேரவை விதி 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இந்த சூழலில்தான், திமுக அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும், மகளிர் அரசு ஊழியர்களுக்க்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்றும் அடிப்படை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு, பேறுகால விடுப்பை உயர்த்தியதை வரவேற்றுள்ள அரசு ஊழியர்கள், பேறுகால விடுப்பில் சென்றால் அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்ற அறிவிப்புக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-announces-increase-maternity-leave-to-govt-staffs-but-house-rent-allowance-not-to-be-provided-344922/