புதன், 29 செப்டம்பர், 2021

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்கு பாமக இழப்பீடு செலுத்த வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

 அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2013ம் ஆண்டு வன்னியர் சங்க மாநாட்டின்போது 58 பேருந்துகளை சேதப்படுத்தி சேவைகளை சீர்குலைத்ததாக பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து இழப்பீடு கோரி தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதுபோன்ற குற்றங்களுக்கு அரசியல் கட்சிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதையும், அரசு பொது சொத்துக்களின் பாதுகாவலர் என்பதையும் குறிப்பிட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் சேதத்தை மதிப்பிடுவதற்கும் இழப்பீடு வழங்குவதற்கும் விசாரணையில் பங்கேற்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்டார்.

இதுபோன்ற சேதங்களை மதிப்பிடவும், குற்றவாளிகளிடமிருந்து இழப்பீட்டை பெற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூலை 17, 2013 தேதியிட்ட MTC மூலம் பாமாகவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் சென்னை நீதிமன்றம் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆம்புலன்ஸ்கள்கூட செல்வதைத் தடுக்கும் இத்தகைய போராட்டங்களின்போது சாலைகள் தடை செய்யப்படுவதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், “இதுபோன்ற குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். சந்தேகமின்றி, ஒரு சாதாரண மனிதனுக்கு அமைதியான வாழ்க்கை நடத்துவதற்கான உரிமை உள்ளதாக அரசியலமைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளது. அதனால், இந்த அரசியல் கட்சியைப் பொருட்படுத்தாமல், அன்றைய அரசாங்கத்தால் சாதாரணன் மனிதனுக்கான உரிமை உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

“மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலமோ அல்லது குடிமக்களின் உரிமைகளை மீறுவதன் மூலமோ அரசியல் கட்சி தனது லட்சியங்களை அடைய முடியாது” என்று நீதிபதி கூறினார்.

தமிழ்நாடு அரசு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தை முறையாக அமல்படுத்த வலியுறுத்திய நீதிமன்றம், 29 ஆண்டுகள் கடந்துவிட்டன, சேதங்கள் அல்லது இழப்புகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும் எத்தனை வழக்குகளில் இழப்பீடு வழங்கப்படுகிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தால், இந்த பெரிய தேசத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மீறல்கள், பொதுமக்களைப் பாதித்துள்ளது. இதுபோன்ற எல்லா சூழ்நிலைகளிலும், சாதாரண குரலற்ற குடிமக்கள், அரசியல் கட்சிகள் அல்லது வகுப்புவாத, மொழி அல்லது இனக்குழுக்களால் செய்யப்படும் இத்தகைய சட்டவிரோதங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று நீதிபதி சுப்பிரமணியம் கூறினார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-order-political-party-must-pay-for-damaging-public-property-in-pmk-case-348262/