சனி, 25 செப்டம்பர், 2021

எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவி; ஒருவர்கூட வேட்புமனு செய்யவில்லை

 ஊராக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஒன்றியத்தில் உள்ள அம்முண்டி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கிராமத்தில் ஒரே ஒரு பட்டியல் குடும்பத்தினர் மட்டுமே இருப்பதாகவும் அதிலும் 2 பெண்கள் மட்டுமே உள்ளதால் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், அந்த கிராமத்தில் இதுவரை ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை.

புதியதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊராக உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் 14ம் தேதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 15ம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனு பரிசீலனை இன்று (செப்டம்பர் 23) நிறைவடைந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி தேதி செப்டம்பர் 25 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, இந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்தில் உள்ள அம்முண்டி கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அந்த கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஏனென்றால், அம்முண்டி கிராமத்தில் பெரும்பான்மையாக வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அந்த கிராமத்தில் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் உள்ளனர். அதிலும் அந்த குடும்பத்தில் 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். அம்முண்டியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறபோது, அங்கே வசிக்கும் ஒரே ஒரு எஸ்.சி குடும்பத்திற்காக ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பட்டியல் இனத்தைச் சேர்ந்த அந்த ஒரு குடும்பத்திலும் யாரும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. அவர்களுக்கு ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அம்முண்டி கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டுமே பட்டியல் இனத்தவராக உள்ள நிலையில், அந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டது குறித்தும், தற்போது அங்கே ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யப்படாதது குறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: அம்முண்டி கிராமத்துக்கு சுழற்சி முறையில் உராட்சி மன்ற தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. அரசு அறிவித்ததை மாற்ற முடியாது. யாரும் போட்டியிட முன்வராத நிலையில், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தனர்.

இதனிடையே, வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள மோதகப்பள்ளி கிராம பொது மக்கள் மற்றும் இளைஞர்கள், அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தினால், முதலமைச்சர் மற்றும் முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கு புகார்கள் அனுப்பப்படுவதோடு, அவர்களின் பெயர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் என்று வேட்பாளர்களை எச்சரித்து ஒரு பெரிய பேனர் வைத்துள்ளனர்.

ஊராட்சி கிராம சபை கூட்டங்களின்போது கணக்குகள் காட்ட வேண்டும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேள்விகள் கேட்டு சரிபார்க்கப்படும் என்றும் என்றும் அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/local-body-polls-panchayat-president-reserved-for-sc-women-in-ammundi-village-but-no-one-contest-345547/