18 09 2021
GST Council Meeting Update : பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 45-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் பலர் கலந்துகொண்ட நிலையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் அவரது உரை அந்த கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் சார்பாக நிதி செயலாளரும் வணிக வரி ஆணையாளரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சார்பாக சமர்பிக்கப்பட்ட உரையில், ஜிஎஸ்டி வரம்பின் கீழ் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையை சேர்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனெனில் ஜிஎஸ்டிக்கு வரி விதிப்புக்கு பின் மாநிலங்களுக்கு இருக்கும் கடைசி வரி விதிப்பு உரிமைகளில் பெட்ரோல் பொருட்களின் வரியும் ஒன்றாகும். “எஞ்சியிருக்கும் சில வரி உரிமைகளில் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை, எனவே பெட்ரோல் பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவதை அடிப்படையில் நாங்கள் எதிர்க்கிறோம்,” என்று கூறியுள்ளார்.
மேலும் 2014 முதல் இப்போது வரை 500 சதவீதம் முதல் 1,000 சதவீதம் வரை மத்திய அரசு வரியை உயர்த்தியதால், மாநிலத்தின் வரி வருவாய் இழப்பு பெருமளவு பாதிப்பை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு 90 சதவிகித கலால் (மாநிலங்களுடன் பகிரக்கூடியது) மற்றும் 10 சதவிகிதத்திற்கும் குறைவான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் (மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது) என்று இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு 96 சதவீதமாக உயர்த்திய நிலையில், மாநில அரசின் வரி வருவாய் 4 சதவிகிதமாக குறைந்துவிட்டது.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரிவிதிப்பை ஜிஎஸ்டி வரம்பிற்கு மாற்ற முயற்சிப்பது ஒவ்வொரு மாநிலத்திற்கு பாதகமாகவும், அபாயகரமான மற்றும் அநீதியாக நாங்கள் கருதுகிறோம். பெட்ரோல் தயாரிப்புகளுக்கு மத்திய அனைத்து வரியையும் மற்றும் கூடுதல் கட்டணத்தையும் முழுமையாக கைவிட்டால், பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவது பற்றி மறுபரிசீலனை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மதுரையில் பலவேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து கேட்டபோது, தொகுதியில் முன் கடமைகள் இருந்த்ததால் கூட்டத்தில் பங்கேற்வில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் முக்கியமான எதுவும் விவாதிக்கப்படாது என்றும், செப்டம்பர் 10 -க்கு பிறகு தான் இந்த கூட்டத்திற்கான அழைப்பை தான் பெற்றதாகவும்,அதற்கு முன்னதாகவே, மதுரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வருக்குத் தெரிவித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து தன்னை விடுவித்ததாகவும் அமைச்சர் கூறினார். மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட கூடுதல் பொருளில், ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக ஐந்து அல்லது ஆறு முக்கியமான பொருட்கள் இருந்த்தாகவும், இது தொடர்பாக 500 ஒற்றைப்படை பக்கங்களை படித்து தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து ஒவ்வொரு பொருளுக்கும் விரிவாக பதிலளித்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும் மதுரையில் 15 முதல் 20 நிகழ்வுகளை என்னால் ரத்து செய்ய முடியவில்லை, இதனால் ஜிஎஸ்டி கூட்டத்தில் தான் பங்கற்கவில்லை என்று அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-finance-minister-ptr-says-why-did-not-participate-in-gst-council-meet-342672/