வெள்ளி, 24 செப்டம்பர், 2021

பிஎம் கேர்ஸ் அரசுக்கு சொந்தமில்லை… ஷாக் கொடுத்த பிரதமர் அலுவலகம்!

 கொரோனா பாதிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், உதவியும் வழங்குவதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிஎம் கேர்ஸ்(PM Cares)நிதியை தொடங்கினார்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்தனர்.

ஆனால், பிஎம் கேர்ஸ் நிதிக்கு வரும் நன்கொடைகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், பிஎம் கேர்ஸ் நிதியில் உள்ள தொகையின் விவரங்களை ஆர்டிஐ மூலமாகவும் பெறமுடிவதில்லை என பலரும் கூறி வந்தனர்.

இதுதொடர்பான டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் சம்யக் அகர்வால் , மக்களின் நலனுக்காக பிஎம் கேர்ஸ் நிதி மார்ச் 2020ஆம் பிரதமரால் தொடங்கப்பட்டது. ஆனால், பிஎம் கேர் நிதியகத்தின் பத்திர நகல் இணையதளத்தில் டிசம்பர் 2020 ஆம் வெளியிடப்பட்டது. அதில், பிஎம் கேர்ஸ் அரசாங்கத்தின் அமைப்பு கிடையாது. எவ்வித சட்டத்தாலோ அல்லது நாடாளுமன்றத்தாலோ அமைக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, பிஎம் கேர்ஸ் அரசாங்கத்தின் அமைப்பு அல்ல என்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசின் பெயர், பிரதமரின் புகைப்படம், அரசின் இலச்சினை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

நிதியத்தின் வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தணிக்கை செய்து, நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று, பிஎம் கேர்ஸ் நிதி குறித்து பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில், “அரசியலமைப்பு சட்டம் பிரிவு 12-இன் கீழ், இந்த அறக்கட்டளை அரசுடைதாக இருந்தாலும் சரி வேறு நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும் சரி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2[எச்] பிரிவின் படி பொதுத்துறை நிறுவனமாக இருந்தாலும் சரி, பொதுப்பிரிவு 8-இன் கீழ் அல்லது தகவல் அறியும் சட்டம் உள்பிரிவு [இ] மற்றும் [ஜே] கீழ், இதுகுறித்த தகவல்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை

அறக்கட்டளையில் நான் வகிப்பது கெளரவமிக்க பதவி. இது வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. இந்தியக் கணக்காளர் மற்றும் கணக்காய்வாளர் ஜெனரல் பரிந்துரைத்த குழுவில் பட்டய கணக்காளராக இருப்பவரே பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையின் நிதியை தணிக்கை செய்கிறார்.

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அறக்கட்டளையால் பெறப்பட்ட நிதி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைப் பெற பிஎம் கேர்ஸ் நிதி பொது அமைப்பு அல்ல. அறக்கட்டளையின் செயல்பாடுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசோ அல்லது மாநில அரசோ கட்டுப்படுத்தாது.

நன்கொடைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமும், காசோலை மூலமும், வரைவோலை மூலமும் மட்டுமே பெறப்படுகிறது. தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையும், செலவுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் மற்றும் நீதிபதி அமித் பன்சால் அடங்கிய அமர்வில் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/pm-cares-fund-not-a-fund-of-government-of-india/