கடந்த சில நாள்களாகவே, பஞ்சாப் அரசியல் களம் பரப்பாகவே இருந்து வருகிறது. செப் 18 ஆம் தேதி பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸில் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பஞ்சாப் முதலமைச்சராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். சாம்கூர் சாஹிப்பின் சட்டமன்ற உறுப்பினரான சன்னி, மாநிலத்தில் முந்தைய SAD-BJP அரசாங்கத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
தலித் முகத்தைக் கொண்ட சன்னியை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டது பல தரப்பினராலும் பாராட்டப்பட்டாலும், கட்சிக்குள் சில கருத்துவேறுபாடுகள் இருந்ததாகக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று, அது உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக, பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி அடைந்த காரணத்தால், ராஜினாமா செய்ததாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவொரு புறம் இருக்க, இன்று மாலை காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், முன்னாள் ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவருமான கன்யா குமார் அதிகாரப்பூர்வமாகக் காங்கிரஸ் கட்சியில் எம்.பி ராகுல் காந்தி முன்னிலையில் இணைந்தார். அதே போல, குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இத்தகைய பரபரப்பு மிக்க நாளான இன்று, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கும் சண்டிகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவரது நெருங்கிய வட்டாரங்களின் கூற்றுப்படி, இரண்டு நாள்கள் டெல்லியில் தங்கவிருக்கும் அமரீந்தர், மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து கட்சியில் முக்கிய பங்கு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், அவரின் டெல்லி பயணமானது பாஜக சேர தான் எனவும் பேசப்பட்டு வருகிறது.
இருப்பினும், இதுதொடர்பான எவ்வித அறிக்கையும் அமரீந்தர் தரப்பில் வரவில்லை.
இதுகுறித்து பஞ்சாபில் உள்ள பாஜக தலைவர்களிடம் கேட்கையில், “கேப்டன் பாஜகவில் சேர விரும்பினால் கட்சியின் கதவுகள் அவருக்குத் திறந்திருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்” என தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/india/amarinder-singh-in-delhi-for-two-days-likely-to-meet-sonia-gandhi/