புதன், 22 செப்டம்பர், 2021

குஜராத்தில் இதுவரை இல்லாத அளவில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல்

 ஈரானில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு கண்டெய்னர்களை புஜ் முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் நுண்ணறிவு பிரிவு இயக்குனரகம் (டிஆர்ஐ) தடுத்து நிறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த ஹெராயின் இருப்பதாக சந்தேகித்த இயகுனரகம் தடயவியல் சோதனையின் செயல்பாட்டை முடித்துள்ளதாகவும், உலக சந்தையில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள 2,988.219 கிலோ போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் கூறியுள்ளது.

அகமதாபாத் மண்டல வருமான நுண்ணறிவு இயகுனரகம் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளபடி, ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து முந்த்ரா துறைமுகத்திற்கு விஜயவாடாவைச் சேர்ந்த ஆஷி டிரேடிங் நிறுவனத்தால் இந்த சரக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இது, “அரை பதப்படுத்தப்பட்ட டால்க் கற்கள்” என்று அறிவித்தது.

பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து ஆஷி டிரேடிங் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு போதைப்பொருள் என்ற சந்தேகம் வருமான நுண்ணறிவு இயக்குனரகத்தால் குறிப்பிட்ட நுண்ணறிவு பிரிவினவுக்கு ஏற்பட்டது.

அதன்படி, வருமான நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனநல மருந்து பொருட்கள் (என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் சோதனைக்காக மொத்தம் 40 டன் எடை கொண்ட இரண்டு கண்டெய்னர் சரக்குகளை தடுத்து நிறுத்தினர். காந்திநகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின் நிபுணர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் போது, ​​இரண்டு கண்டெய்னர்களிலிருந்து சந்தேகத்திற்குரிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. சோதனைக்குப் பிறகு, அது ஹெராயின் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, முதல் கண்டெய்னரில் இருந்து 1999.579 கிலோவும், இரண்டாவது கண்டெய்னரில் இருந்து 988.64 கிலோவும் மீட்கப்பட்டது என்று ஒரு வருவாய் நுண்ணறிவு இயக்குனரக அதிகாரி கூறினார்.

ஏஜென்சியின் கருத்துப்படி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகமதாபாத், காந்திதம், மாண்ட்வி, டெல்லி மற்றும் சென்னையில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல நிறுவனங்களும் பல நபர்களும் விசாரணையில் உள்ளனர். இந்த விசாரணையில் ஆப்கானிஸ்தான் பிரஜைகளின் தொடர்பும் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் 10 நாள் காவலில் வைக்க புஜ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது” என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஏழு ஈரானிய கடத்தல்காரர்கள் போர்பந்தருக்கு அழைத்து வரப்பட்டனர். குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையும், இந்திய கடலோரக் காவல் படையினரும் இணைந்து ஹெராயின் கடத்தியதாகக் கூறி ஈரானிய நாட்டைச் சேர்ந்த 7 பேர்களை இந்திய கடற்பரப்பில் தடுத்து நிறுத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய நபர்கள் திங்கள்கிழமை போர்பந்தர் கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருள் மற்றும் மனநல மருந்துப் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் 30 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் கூறுகையில், ஜும்மா என்ற ஈரானிய மீன்பிடி படகு போர்பந்தர் கடற்கரையிலிருந்து 185 நாட்டிகள் மைல் தொலைவில் உள்ள இந்திய கடற்பரப்பில் சனிக்கிழமை இரவு பயங்கரவாத எதிர்ப்பு படை மற்றும் கடலோர காவல்படையின் கூட்டு நடவடிக்கையில் பிடிபட்டது. “குற்றம் சாட்டப்பட்டவர்கள் குஜராத் கடற்கரையில் தங்களுடைய ஆட்களுக்கு போதைப்பொருட்களை பஞ்சாபிற்கு கடத்திச் செல்ல இருந்தனர் … போர்பந்தர் கடற்கரைக்கு படகு கொண்டு வரப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்” என்று ஒரு மூத்த பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரி கூறினார். மேலும், குஜராத்தில் இதுவரை இல்லாத அளவில் ரூ.21,000 கோடி மதிபுள்ள 3,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/heroin-seized-at-mundra-port-weighs-3000-kg-worth-rs-21000-crore-dri-343947/