திங்கள், 20 செப்டம்பர், 2021

தமிழக அவமானம்…லட்சங்களில் ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்… அதிகாரிகள் விசாரணை!

 19 09 2021 

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. மாவட்டங்கள் மறுசீரமைப்பு காரணமாக அப்போது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகிற அக்டோபர் 6 , 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவிற்குட்பட்ட பொண்ணங்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளது. அந்த பதவி ஆதிதிராவிடர் பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சியிலுள்ள துத்திப்பட்டு கிராமத்தினர் ஒன்றிணைந்து ஒருவரை ஏலம் விட்டு நிறுத்துவதால், குறைவாக வாக்காளர்களைக் கொண்ட பொண்ணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலைவராகும் வாய்ப்பு கிடைப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பதவி ஏலம்விடப்பதை கண்டித்து, பொண்ணங்குப்பம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொண்ணங்குப்பம் கிராம மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் டி.மோகன் தலைமையிலான அதிகாரிகள் குழு கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து பேசிய ஆட்சியர் மோகன், “இவ்விவகாரம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஆதாரங்கள் கிடைக்கும் பட்டத்தில், சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத்” தெரிவித்தார்.

ஆனால், அலுவலர்கள் அங்கிருந்து புறப்பட்டதைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி அதிக தொகைக்கு ஏலம் சென்றதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தேரி ஊராட்சி தலைவர் பதவி, வெள்ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவருக்கு ரூ.14 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பதவிக்கு 5 பேருக்கு மேல் போட்டியிட்டதால், ஊர் பெரியோர்கள் முன்னிலையில் ஏலம் நடந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து கிராம இளைஞர்கள் வருவாய்த் துறையினருக்கும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கும் புகார் அளித்தனர். அதன்பேரில், கிராமத்திற்கு விரைந்த வருவாய்த் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு ஏலம் நடைபெற்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் பஞ்சாயத்துத் தலைவர் பதவியை ஏலம் விட முயற்சிகள் எழுந்தது குறித்து, விரிவான விசாரணைக்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/auction-of-panchayat-president-posts-in-villupuram-district/