ஐநா சபையில் பிரதமர் மோடி உரையாற்றும்போது குறைவான இருக்கைகளே நிரம்பியதாகவும், யாருமே கைத்தட்டவில்லை என்றும், இது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு ட்விட்டரில் சிலர் எதிர் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
பிரதமர் மோடி நான்கு நாட்கள் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துகொண்டு இன்று நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க பயணத்தின் முதல் நாளில் அந்நாட்டின் முக்கிய நிறுவனங்களின் சிஇஒக்களை சந்தித்தார். பின்னர் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்தார். அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்தும் ஆசிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் உரையாடினார்.
பயணத்தின் கடைசி நாளான(25 09 2021) நேற்று நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது, பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது. இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நாவில் பேசுகிறேன். குஜராத் முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் கடந்த 20 ஆண்டுகளாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வருகிறேன். உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இப்போது 75 ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது.
வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கடைக்கோடி மக்களை சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது. இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது.
அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமாகிறது. பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது. இன்று, உலகம் பிற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாதத்தின் அதிகரித்த அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இத்தகைய சூழ்நிலையில், முழு உலகமும் அறிவியல் அடிப்படையிலான பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக மாற்ற வேண்டும். அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை வலுப்படுத்தும் பொருட்டு, இந்தியா அனுபவம் சார்ந்த கற்றலை ஊக்குவிக்கிறது
மறுபுறம், “பயங்கரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் பிற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள். பயங்கரவாதம் அவர்களுக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதை இந்த நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று உரையாற்றினார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் உரையாற்றும் போது, ஒரு சில இருக்கைகளில் மட்டுமே தலைவர்கள் அமர்ந்து இருந்தாகவும், மற்ற இருக்கைகள் காலியாக இருந்தது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், பிரதமர் அங்கு உரையாற்றும் போது யாருமே கைத்தட்டவில்லை என்றும் இது இன்னும் ஏமாற்றத்தை அதிகப்படுத்தியதாகவும் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கூடுதலாக ஐநா சபையில் நிரந்த உறுப்பினராக இந்தியா எடுக்கும் முயற்சிகள் மிகப்பெரிய அளவில் முட்டாள்தனமாக இருப்பதாகவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடி ஐநாவில் பேசும் போது, யாரும் கைத்தட்டவில்லை என்ற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் மறுத்துள்ளனர். அதில் ஒருவர் மோடிஜியின் பேச்சு ஹிந்தியில் இருந்தது, சரியான நேரத்தில் மொழிபெயர்ப்பு விஷயங்கள் எப்படி அங்கிருந்த தலைவர்களுக்கு சென்றன என்பது எங்களுக்குத் தெரியாது, அது கூட கைதட்டல் இல்லாததற்கு காரணமாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே இன்னொருவர், நான் பிரதமர் மோடியின் முழு உரையையும் கேட்டேன். குறைந்தது நான்கு முறையாவது பாராட்டி கைத்தட்டப்பட்டது. எனவே உங்கள் பதிவு முற்றிலும் உண்மை இல்லாதவை என்று பதிவிட்டுள்ளார்
source https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-disappointed-for-no-one-applauded-when-pm-speech-at-un-347073/