17 09 2021 தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் விரைந்து வந்த சுகாதாரத் துறையினர் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கூடங்களை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒரே நாளில் 52 மாணவர்களுக்கு திடீரென காயச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம் அருகே மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்லத்திகுளம், உடையாம்புளி, புதூர், மாறாந்தை, கரும்புலியூத்து உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள்படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியதையடுத்து மாணவ மாணவிகள் தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 15) பள்ளிக்கூடத்துக்கு வந்த 22 மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ஒரேநாளில் 22 மாணார்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுகாதாரத் துறையினர் விரைந்து வந்து, காய்ச்சல் ஏற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
22 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவராத நிலையில், நேற்று (செப்டம்பர் 16) மேலும் 30 மாணவ-மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் பள்ளியிலும் சுற்றுவட்டாரப் பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த சுகாதாரத் துறையினர் காய்ச்சல் ஏற்பட்ட 30 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
ஆலங்குளம் அருகே மாறாந்தையில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 52 மாணவ மாணவிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறபடுத்தியது. மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/52-students-suffering-from-suddent-fever-in-a-same-school-health-department-conduct-covid-19-test-342548/