வியாழன், 23 செப்டம்பர், 2021

இஸ்லாமுக்கு எதிராக யூடியூப்-ல் அவதூறு வீடியோக்கள்; யோக குடில் சிவக்குமார் கைது

 இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றிய யோக குடில் சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயதான சிவக்குமார், சென்னையை அடுத்த புழல் இந்திரா நகர் அருகே யோககுடில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே, தன்னை சிவன் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர். இந்நிலையில் இவரது யூடியூப் சேனலில், இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட வீடியோக்களை பதிவேற்றியிருந்தார். தற்போது அந்த அவதூறான கருத்துக்கள் கொண்ட வீடியோக்களுக்ககாக யோக குடில் சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாதவரம் பொறுப்பாளர் சாதிக் பாஷா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதிக் பாஷா தனது புகாரில், “சிவகுமார் இஸ்லாம் மற்றும் பிற மதங்களின் கடவுள்கள் மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய மற்றும் கீழ்த்தரமான வீடியோக்களை பதிவேற்றுகிறார். இது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடக தளத்தில் வைரலாகியுள்ளது,” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி, விரிவான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு சிவகுமாரைக் கைது செய்தனர். ஐபிசியின் எட்டு பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் ஒரு பிரிவின் கீழ் சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், சிவகுமார் இந்து கடவுள்களுக்கு எதிராக இழிவான வீடியோக்களை வெளியிட்டதாக கூறி இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/yogakudil-sivakumar-arrested-for-videos-against-islam-344360/