21 09 2021மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அனைத்து மாவட்டங்களிலும் திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் போராடியைக் குறிப்பிட்டு உதயநிதி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடியேந்தி இன்று (செப்டம்பர் 20) போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காணொலிக் காட்சி மூலம் நடந்த இந்தக் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும் விலைவாசி உயர்வு, பொருளாதாரச் சீரழிவு, தனியார் மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று (செப்டம்பர் 20) நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசின் போக்கைக் கண்டித்து கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் திமுக கூட்டணி கட்சியினர் தங்கள் வீடுகளின் முன்பும், கட்சிகளின் தலைமையிடம் முன்பும் கறுப்புக் கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (செப்படம்பர் 20) காலை கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி., திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “3 வேளாண் விரோத சட்டங்கள்,பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை,பொருளாதார வீழ்ச்சி,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என நாட்டை வரலாறு காணாத சீரழிவில் தள்ளியிருக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அன்பகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக உள்ளதால், தமிழகம் முழுவதும் திமுகவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இளைஞரணி அமைப்பாளர்கள், மத்திய பாஜக அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர் என்பதை புகைப்படத்துடன் வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி தூள் கிளப்பியதாக திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். அதற்கு காரணம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இளைஞரணி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி வருவது முக்கிய காரணம் என்கிறார்கள்.
அதே போல, மத்திய பாஜக அரசை எதிர்த்து நடைபெற்ற திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டத்தில், திமுக மகளிர் அணி சார்பில், திமுக எம்.பி கனிமொழி சென்னை சிஐடியு காலனியில் உள்ள அவரது வீடு முன்பு கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “எரிபொருள் விலை உயர்வு, வேளாண் சட்டங்கள், பெகாசஸ், மாநில உரிமைகளைச் சிதைப்பது எனத் தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து, திமுக முன்னெடுத்த போராட்டத்தில், மகளிர் அணி சார்பில் எங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்ற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி இன்று காலை 10.30 மணிக்கு சத்தியமூர்த்திபவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கருப்பு கொடி ஏற்றி கண்டன உரை நிகழ்த்தினார்.
மோடி அரசின் மக்கள்விரோத கொள்கைகளைக் கண்டித்தும் வேளாண் சட்டங்களையும் தொழிலாளர் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் கருப்புக்கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அண்ணா நகரில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதே போல, திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் நடத்திய போராட்டங்களின் புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருப்பது இளைஞரணியினரை உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.
https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-allies-parties-protest-with-black-flag-against-bjp-lead-central-govt-in-all-over-state-343561/