Suba Veerapandian Complaint Against H.Raja : தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த எச்ராஜா, சுப.வீரபாண்டியன் மூளை குப்பை தொட்டி என்றும், அவர் அறிவாலைய வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கிறான் என்றும் ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தன் மீதான விமர்சனம் குறித்து சுப.வீரபாண்டியன் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில்,
கடந்த செப்டம்பர் 27்-ந் தேதி அன்று சமூக வலைத்தளங்களில் பிஜேபியைச் சேர்ந்த எச். ராஜா, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காணொளி வெளியாகி உள்ளது. அதில் என்னைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு, ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது தொடர்பாகப் பொய் பேசுவதால், சுப.வீரபாண்டியனின் மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையமான அறிவாலயத்தில் உட்கார்ந்துகொண்டு சுப.வீரபாண்டியன் பிச்சை எடுக்கிறான் என்றும் ஒருமையில் என்னை அவதூறாகப் பேசியுள்ளார்.
மேலும், பத்திரிகையாளர்கள் அனைவரையும் நோக்கி எல்லா பத்திரிகையாளர்களும் பிரஸ்ட்டிடியூட்ஸ் (Presstitutes) என்று கூறியுள்ளார். அந்தச் சொல்லின் மூலச் சொல்லாக, Prostitutes என்பது உள்ளது என்று அதற்கான விளக்கங்களை இணையங்களில் காணமுடிகிறது. இவ்வாறாகப் பத்திரிகையாளர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி, எச்.ராஜா பேசியுள்ளது எனது நற்பெயரைக் கெடுக்கும் விதமாக பொதுமக்கள் மத்தியில், அவப்பெயர் உண்டாக்கத் திட்டமிட்டு கெட்ட நோக்கத்துடன் உள்ளது. இதனால் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகார் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நிகழ்வை தான் கடந்து போய்விடலாம் என்று நினைத்த்தாகவும், ஆனால் தான் இருக்கும் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தோழர்கள் இது தொடர்பான புகார்மனு ஒன்றையாவது கொடுக்கலாம் என்று கூறியதால் புகார் அளித்தாகவும் சுப.வீரபாண்டியன் வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.டி.பி.ஐ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்பினரும் குரல் கொடுத்து வரும் நிலையில, இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை ஊடகத்தினர் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் தமிழத்தில் பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-suba-veerapandian-complaint-against-h-raja-348834/