Gulab Storm Effect Four days Rain in Tamilnadu Tamil News : நேற்று முன்தினம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இப்போது புயல் சின்னமாக மாறியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் தெரிவித்திருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றாலும் புயல் ஏற்படுவது அரிதான ஒன்று. அந்தவகையில் கடந்த 2005-ம் ஆண்டு பியார் புயலும், 2018-ம் ஆண்டு டாயி புயலும் ஏற்பட்டன. அந்த வரிசையில் இந்த ஆண்டு உருவான புயலுக்கு ‘குலாப்’ என்று பாகிஸ்தான் பெயர் சூட்டியிருக்கிறது.
இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் காரணமாகவும் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இன்று தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதன் தொடர்ச்சியாக நாளை தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மேலும், 28 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் உருவாகியிருக்கும் காரணத்தால் இன்றும், நாளையும் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் கூண்டும் எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 1-ம் எண் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/gulab-storm-effect-four-days-rain-in-tamilnadu-tamil-news-346865/