செவ்வாய், 21 செப்டம்பர், 2021

இரட்டை இலை சுகேஷ் சந்திரசேகர் வழக்கு: சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம்.. 6 பேர் சஸ்பெண்ட்..

 

திகார் சிறை நிர்வாகம், ரோகிணி சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் குறித்து உள் விசாரணை நடத்திய பிறகு அலட்சியமாக செயல்பட்ட 9 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை 6 சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக டெல்லி சிறைத்துறை தலைவர் சந்தீப் கோயல் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்று கைதான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் திகார் மற்றும் ரோகிணி சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் ரான்பாக்ஸி முன்னாள் விளம்பரதாரர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கடந்த மாதம் ரோகிணி சிறையில் இருந்து கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, ஷிவிந்தரின் மூத்த சகோதரர் மல்விந்தர் மோகன் சிங்கின் மனைவியிடம் ரூ.4 கோடி மோசடி செய்ததாக டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு சுகேஷூக்கு எதிராக புதிய எஃப்ஐஆரை பதிவு செய்தது. மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சட்டத்தின் கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான விசாரணையின் போது சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை சரிபார்க்க மூத்த அதிகாரிகள் உள் விசாரணையைத் தொடங்கியதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விசாரணையின் போது, ​​சிறை அதிகாரிகள் உதவியுடன் சுகேஷ் செல்போன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். சிறையில் இருந்தபோது, சிசிடிவியில் சிக்காமல் தப்பிக்க தனது பெட்ஷீட்களை திரைச்சீலைகளாகப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட இரண்டு சிறை கண்காணிப்பாளர்கள் உட்பட ஆறு சிறை அதிகாரிகளிடம் பொருளாதார குற்றப்பிரிவு மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது. சுகேஷூக்கு உதவியதாக ரோகிணி சிறை கண்காணிப்பாளர், மூன்று துணை கண்காணிப்பாளர்கள், இரண்டு உதவி கண்காணிப்பாளர்கள், ஒரு தலைமை வார்டர் மற்றும் இரண்டு வார்டர்கள் உட்பட ஒன்பது அதிகாரிகளை சிறை நிர்வாகம் கண்டறிந்துள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி அரசின் உள்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, ​​சுகேஷ் தனது சிறை தொடர்புகளிலிருந்து ஐபோன் பெற்றதாகவும், தொலைபேசியின் செட்டிங் அனைத்தும் சென்னையில் ஒரு விற்பனையாளரால் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் சிறை அதிகாரிகளுக்கு ரூ.65 லட்சம் பணம் தந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்று கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு ரோகிணி சிறைக்கு மாற்றப்பட்டபோது சிறை அதிகாரியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், சிறை அதிகாரி ஒருவர் தனது கூட்டாளியிடம் இருந்து தொடர்ந்து பணம் வாங்கியதாகவும் சுகேஷ் கூறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

source https://tamil.indianexpress.com/india/election-commission-bribery-case-sukesh-chandrasehkar-prison-officers-detained-343323/